கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 1,204 குற்றவாளிகள் கைது: 17,110 மது பாட்டில்கள் பறிமுதல்

காஞ்சிபுரம், ஜூலை 31: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்த வழக்கில் 1,204 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 17 ஆயிரத்து 110 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்பி சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக இதுவரை 1196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1204 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 110 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற 2 நபர்கள் மீது ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை