கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் வீடுகளில் புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி, ஜூலை 29: கள்ளக்குறிச்சி விநாயகா நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பன் மகன் ரமேஷ்(39). இவர் தனது வீட்டை சம்பவத்தன்று பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றதாகவும் மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளி காமாட்சி விளக்கு, அருணாகயிறு, மெட்டி, கொலுசு உள்பட 400 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராம கூட்ரோடு பகுதியில் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கடலூர் மாவட்டம் காரைகாடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் குணசேகரன்(54), மற்றொருவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த ராபி மகன் சஜு(39) என்பதும் தெரியவந்தது. மேலும் கள்ளக்குறிச்சி விநாயாகா நகர் பகுதியில் ரமேஷ் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருடியதை அவர்கள் ஒப்பு கொண்டனர். சின்னசேலம் மகாசக்தி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் மனைவி பிரியா என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 480 கிராம் நகை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து குணசேகரன் மற்றும் சஜு ஆகிய இருவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’