கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெரம்பூர்: ஓட்டேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (45). இவரது கணவர் ஆறுமுகம். தம்பதிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார்.  இதையடுத்து, செல்வி தனது 3 குழந்தைகளுடன் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றினார். அப்போது, புளியந்தோப்பு கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியிடம், ‘‘எனது குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாகி விட்டனர். எனவே, இனிமேல் எனது வீட்டிற்கு வர வேண்டாம்,’’ என்று கூறிய செல்வி, சுப்பிரமணியுடன் பழகுவதை தவிர்த்தார். அதனை ஏற்க மறுத்த சுப்பிரமணி, தன்னுடன் சேர்ந்து வாழ செல்வியை அழைத்தார். அதனை செல்வி ஏற்க மறுத்தார். இதனிடையே செல்வி தனது மகளை, ஓட்டேரி பட்டாளம் ராமானுஜர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (32) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், செல்வி தனது மகளை பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த சுப்பிரமணி, அங்கு சென்று செல்வியிடம் சேர்ந்து வாழ்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செல்வி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி தீ வைத்தார். அப்போது, சுப்பிரமணிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. செல்வியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அங்கும், இங்குமாக ஓடியபடி வலியால் அலறித்துடித்தார். தீயை அணைக்க முயன்ற டில்லிபாபுவிற்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீக்காயமடைந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற செல்வி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தீ வைத்து எரித்த சுப்பிரமணி மற்றும் மருமகன் டில்லிபாபு ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு