களைகட்ட தொடங்கியது இடைத்தேர்தல் விக்கிரவாண்டிக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்: லாட்ஜ், விடுதிகள் ஹவுஸ்புல்லாகிறது

விழுப்புரம், ஜூன் 15: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. நேற்று முதல் வெளியூர்களிலிருந்து அரசியல் கட்சியினர் படையெடுத்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க லாட்ஜ், விடுதிகளை புக்கிங் செய்து வருகின்றனர். 21ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தபிறகு கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு விக்கிரவாண்டி தொகுதியில் முற்றுகையிட உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல்தேதி அறிவித்ததுமே திமுகவில் வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்த அன்னியூர்சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனிடையே பாஜ கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்து தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாமகவும் வேட்பாளரை ஏற்கனவே தேர்வு செய்து விட்டனர். இதனிடையே அதிமுகவில் வேட்பாளராக ராஜா அல்லது முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியிலும் வேட்பாளராக அபிநயா என்பவர் போட்டியிடுகிறார். மொத்தத்தில் இடைத்தேர்தலில் நான்குமுனைபோட்டி உள்ளது. நேற்று ேவட்புமனுதாக்கல் தொடங்கிய நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

18,19ம் தேதிகளில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் வெளியூர்களிலிருந்து அரசியல் கட்சியினர் குவியத் தொடங்கியுள்ளனர். நேற்று திமுக தரப்பில் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இந்தியா கூட்டணி மாநில தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் விக்கிரவாண்டியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி மாநிலதலைவர் செல்வப்பெருந்தகை, விசிக திருமாவளவன், தவாக வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி மாநில நிர்வாகிகள் எம்பி, எம்எல்ஏக்கள் வருகை புரிந்தனர். அவர்களுடன் கட்சியினரும் விக்கிரவாண்டிக்கு படையெடுத்துள்ளனர். தொடர்ந்து இன்று அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை அழைத்து இந்ததொகுதியில் பிரமாண்டமாக கூட்டம் நடத்தவும் அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். ெமாத்தம் 103 கிராமங்கள், ஒரு பேரூராட்சி உள்ள நிலையில் அந்தந்த கட்சியிலும் நிர்வாகிகளுக்கு எத்தனை கிராமங்கள் என்று பிரித்து பட்டியல் கொடுத்து பிரசாரத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இதற்காக வெளியூரிலிருந்து குவியத்தொடங்கியுள்ள அரசியல் கட்சியினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜிகள், விடுதிகளில் புக்கிங் செய்து தங்கி வருகின்றனர். மேலும் இடம் கிடைக்காத நிலையில் அருகில் உள்ள விழுப்புரம், திண்டிவனம் நகர பகுதிகளில் உள்ள லாட்ஜிகள், விடுதிகளை புக்கிங்செய்து அரசியல்கட்சியினர் தங்கிவருகின்றனர். இடைத்தேர்தல் நேற்றுமுதல் களைகட்ட தொடங்கிய நிலையில், 21ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அனல் பறக்கும் பிரசாரம் தொடங்குகிறது. அப்போது திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும், அதிமுகவில் இபிஎஸ், தேமுதிக பிரேமலதா, பாமகவில் ராமதாஸ், அன்புமணிராமதாஸ், பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தொகுதியில் பிரசாரத்துக்கு முற்றுகையிட உள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி