களக்காடு அருகே பரபரப்பு; ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை: விவசாயிகள் பீதி

களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாயை அடித்து கொன்று தூக்கி சென்றதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிவபுரம், கள்ளியாறு பகுதிகள் உள்ளன. இங்குள்ள விளைநிலங்களில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகம். இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகும் கடமான், காட்டு பன்றிகள் வாழைகளை துவம்சம் செய்து வருகின்றன. கடமான்கள் வாழைத்தார்களை தின்று நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பன்றிகள் வாழைகளை சாய்த்து சேதப்படுத்துகின்றன. வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க இரவில் விவசாயிகள் விளைநிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் கடமான், பன்றிகளுடன் சிறுத்தையும் சேர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒரு நாயை வேட்டையாடி, அடித்து கொன்று தூக்கி சென்றுள்ளது. நேற்று அதிகாலை கள்ளியாறு பகுதி விளைநிலங்களில் விவசாயிகள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதர்களில் இருந்து வெளிவந்த சிறுத்தை மேலும் ஒரு நாயை கவ்விப் பிடித்தது. இதைப்பார்த்த விவசாயிகள் சத்தமிட்டதால் சிறுத்தை நாயை போட்டு விட்டு தப்பி விட்டது. நாய் காயத்துடன் உயிர் தப்பியது. இதுகுறித்து விவசாயிகள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறை ஊழியர்கள் சென்று அங்கு பதிவாகியிருந்த சிறுத்தை கால்தடங்களை ஆய்வு செய்தனர். சிறுத்தை அட்டகாசத்தால் பீதியடைந்துள்ள விவசாயிகள், பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்பட்டு வருவதாக கூறுகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதையடுத்து குடிநீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுப்பது அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.செயல் இழந்த மின்வேலிகள்விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், ‘‘பொதுவாகவே களக்காடு பகுதியில் கோடை காலம் தொடங்கியதும் வனவிலங்குகள் அட்டகாசமும் அதிகரித்து விடும். எனவே வனத்துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலையடிவாரத்தில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டு செயல் இழந்து கிடக்கும் சோலார் மின்வேலிகளை சீரமைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் விவசாயிகள் மனுக்கள் கொடுத்துள்ளனர். மின்வேலிகள் செயல் இழந்துள்ளதால் வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகி வருகிறது. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்….

Related posts

குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயம்

திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்