கல்வி துறையில் கரன்சி பார்க்கும் அதிகாரியின் தில்லாலங்கடி கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டீலா… நோ, டீலா… என்று மாறிய காக்கிகள் குறித்து சொல்லுங்க..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘நாகர்கோவிலில் கோட்டாறு காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மாக் கடை பார் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறதாம். இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுபற்றி புகார்கள் சென்றால், பெயரளவிற்கு ஒரு வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். ஆனால், அன்றைய தினமே மீண்டும் பார் மற்றும் மதுவிற்பனை கொடி கட்டி பறக்கிறதாம். இதற்கு கோட்டாறு அதிகாரிக்கு லாபத்தில் 50 சதவீதம் டீலாம். டீல் இல்லாவிட்டால் ரெய்டு என்ற பெயரில் காக்கி அதிகாரி தொல்லை கொடுப்பாரோ என்று பார் ஓனர் கரன்சியை வாரி இறைக்கிறாராம். எஸ்.பி உள்பட முக்கிய காவல்துறை அதிகாரிகள் செல்லும் சாலையில் நடப்பதுதான் இதில் ஹைலைட் என்கிறார்கள்,காக்கி உடையை உடலில் ஓடும் ரத்தமாகும் என்று கருதும் சிலர், இது குறித்து மாவட்ட காக்கி உயரதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தினமும் 8 ஆயிரம் மாமூலாமே..’’ என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘வெயிலூர் மாவட்டத்துல பல டாஸ்மாக் விற்பனையாளருங்க, சூப்பர்வைசருங்க சரியா கல்லா கட்டுறாங்களாம். குறிப்பாக வெயிலூர் தானிய மண்டிங்க இருக்கிற இடத்துல இயங்கும் கடையில, சிரசு விழா நடக்கிற ஊருக்கு பக்கத்துல ‘சீ’னு ஆரம்பிக்கிற ஊர்ல இருந்து வர்ற, பஞ்சாமிர்த ஊரு பேரை வெச்சிருக்கிறவரும், மணமானவரும் தினமும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை இல்லாம போறதில்லையாம். இதுல ‘சீ’யான ஊரை சேர்ந்தவரு ரூ.50 லட்சத்துக்கும் மேல வீடு கட்டி வர்றாராம். இதுக்காகவே வெளியில மாத்தினாலும் ‘எப்படியாவது’ வேலூருக்கே வந்து விடுகிறாராம். சமீபத்தில் வேலூரில் 5 இடங்களில் ரெய்டு நடத்தின சேலத்து அதிகாரியையே விஜிலென்சுக்கு விலாவாரியா போட்டு கொடுத்து இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில், இலையின் ஓசை அதிகமாக கேட்க காரணம் என்னவாம்…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘இந்த மாவட்டத்தில் ஆட்சி மாறினாலும், இன்னமும் அரசு டெண்டர் விவகாரங்களில் இலைக்கட்சியினருக்கு நேரடியாகவே சில அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் விதிகளை மீறி உதவி செய்வது தொடர்கிறதாம். இதனால் இம்மாவட்டத்தில் குடிநீர் விநியோக திட்ட பராமரிப்பு, நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் ஏலம், மீன்பிடி ஏலம் ஆகியவைகளில் இலைக்கட்சியினரின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறதாம்… கடந்த வாரம் ‘‘பெரிய பாண்ட்’’ பகுதியில் நடந்த அரசு டெண்டர்களில் அதிகப்படியான டெண்டர்களை இலை தரப்பினரே எடுக்க, இத்துறைகளில் நீண்ட நாட்களாக பணிபுரியும் சில பணியாளர்கள் ‘‘உள்ளடி’’ வேலைபார்த்ததாலேயே இந்த நிலைமை என டெண்டர் கிடைக்காத தகுதிக்குரியவர்கள் அங்கலாய்த்து வருகின்றனர். ஆட்சி மாறி 4 மாதங்கள் கடந்தும், அனைத்து துறைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் ‘‘இலை கட்சியின் மூன்று எழுத்து’ கொண்டவரின் செல்வாக்கு அப்படியே உள்ளதாம். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவதுதான் இந்த நிலைக்கு காரணம். இந்த நிலை மாற்றிட வேண்டும். உரிய தகுதியுடையோர் ஒப்பந்தம் பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வேதனைக் குரல் ஒலிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘எதிர்கால தூண்களான மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குறாங்க… ஆனால், அத்துறையில் உள்ள உயரதிகாரிகள் கரன்சியை தான் பார்க்கிறாங்க என்று நேர்மையான ஆசிரியர்கள் பேசிக்கிறாங்களே, உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறையின்கீழ் 22 வட்டார வள மைய அலுவலர் (பிஇஓ) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலர்கள், அந்தந்த பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளித்தல், அங்கீகாரம் புதுப்பித்தல், பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பார்வையிட்டு, அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவேண்டும். அவர், இந்த அறிக்கையை ஆய்வுசெய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கையில் உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பல பிஇஓக்கள் அவர்களது ஆபீசுக்கு செல்வதே இல்லை. ஒரு சிலர், காலையில் வந்து வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்துவிட்டு, சொந்த வேலையை பார்க்க வெளியே சென்றுவிடுகின்றனர். மாதம், பத்து நாட்கள்கூட அலுவலகத்தில் இருப்பதில்லை. ஒரு சில பிஇஓக்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில், ஒரு வகுப்பறையை கையகப்படுத்தி, தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.எது நடந்தாலும் எங்களை கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் இந்த விதிமீறல் தொடர்கிறது. இன்னும் சில அதிகாரிகள், பள்ளி கட்டிடம் ஆய்வு, விளையாட்டு மைதானம் ஆய்வு என்ற பெயரில் வசூல் வேட்டையில் இறங்கிவிட்டனர். ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் சம்திங் கொடுத்தால்தான், மேலிடத்துக்கு ஆய்வறிக்கை அனுப்புவேன் என வெளிப்படையாகவே மிரட்டி, பணம் பறிக்கின்றனர். தற்போது பல பள்ளிகள் மூடிக்கிடந்தாலும், ஆய்வு என்ற பெயரில் கரன்சி வேட்டை தொடர்கிறது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால், குடிசைப் பள்ளிகளுக்குகூட அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. திறமையான மாணவர்களை உருவாக்க நினைக்கும் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற உயரதிகாரிகளால் பெரும் தொல்லை என்றார்…’’ விக்கியானந்தா. …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா