கல்வியில் பெரியவர்…

கல்விச் செல்வம், அழியாத செல்வம். அது கொடுக்கக் கொடுக்க வளருமே தவிரக் குறையாது. ஆனால், ஒரு சிலருக்குத்தான், கல்விச் செல்வம் நிலைத்து நின்று பெருமையை அளிக்கிறது. அவ்வாறு நிலைத்து நின்று பெருமை அடைந்தவர்கள் பெரும்பாலும் புலவராகிப் பெரும்புகழ் பெறுகிறார்கள். அவர்களின் நூல்கள் நிலைத்து நின்று, அவர்களின்  பெருமையைப் பறை சாற்றுகின்றன. அதற்குக் காரணம், அவர்களின் தூய்மையான உள்ளமும், அழுத்தமான பக்தியுமே! அதன் காரணமாகவே அவர்கள் சொன்னவையெல்லாம் பலித்ததாக, அப்புலவர்களின் வரலாறுகள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட புலவர்களில், பெரும் புகழ் பெற்றவர் கம்பர். அவருடைய சொல்லுக்கு அனைத்தும் கட்டுப்பட்டன. தமிழ்நாடு செய்த தவப்பயனாய், தமிழ்நாட்டில் அவதரித்த கம்பரின் வாழ்விலிருந்து சில அபூர்வ நிகழ்வுகள். கம்பரின் புகழ் தமிழ்நாடு எங்கும் பரவி இருந்தது. அதை அறிந்த சோழ மன்னர், கம்பரைத் தன் சபையில் புலவராக அமர்த்தினார். கம்பரின் தமிழ்க் கவிச்சுவையை அனுபவித்து, மன்னர் மகிழ்ந்தார். ஒருநாள், எதிர்பாரா விதமாகக் காவேரியில் நீர் பெருகிக் கரை புரண்டு, பெரும் சேதம் உண்டாக்கத் தொடங்கியது. மன்னரும் மக்களும் மனம் கலங்கினார்கள். அதை அறிந்த கம்பர்,காவேரி அன்னையை வேண்டி,கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள்பொன்னி கரையழிந்து போனாள் என்று – இந்நீர்உரை கிடக்கலாமோ? உலகுடைய தாயே!கரை கடக்கலாகாது காண்என்று பாடினார். அடுத்த விநாடியில் வெள்ளப்பெருக்கு குறைந்து அடங்கியது. மன்னரும், மக்களும் மகிழ்ந்தார்கள். இவ்வாறு தெய்வ அருள் பெற்றவராக இருந்தும் கம்பர், அதற்காகப் பெருமிதப்பட வில்லை. மேலும்மேலும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். அதை விளக்கும் நிகழ்வு!ஒருநாள்… கம்பர் வயல்களின் வழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த விவசாயிகள், “மூங்கில் இலை மேலே…ஏ…ஏ…” என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பாடலைக் கம்பர் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாப்பாட்டு நேரமாக இருந்ததால், விவசாயிகள் பாடல் பாடுவதை நிறுத்தி, ஏற்றம் இறைப்பதையும் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள். கம்பருக்கோ இருப்பு கொள்ளவில்லை. ‘‘மூங்கில் இலை மேலே… என்ற இந்தப் பாடலை எப்படி முடிப்பார்கள்? ஆலஇலை மேலே பகவான் உறங்குவதைப் போல, மூங்கில் இலை மேலே யாராவது உறங்குகிறார்களா?” என்றெல்லாம் பலவாறாக ஆலோசித்தார். எந்தப் பதிலும் தோன்றவில்லை. ‘‘சரி! அவர்கள் வரட்டும். பாட்டை எப்படி முடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்” எனத் தீர்மானித்து, அங்கேயே நின்று விட்டார் கம்பர். சற்று நேரம் ஆனது. விவசாயிகள் திரும்பி வந்து, ஏற்றத்தில் ஏறிப் பாடத் தொடங்கினார்கள். “மூங்கில் இலை மேலே… ஏ… ஏ… தூங்கும் பனி நீரே!” என்று பாடி முடித்தார்கள். அதைக்கேட்ட கம்பர் வியந்தார். “ஆகா! ஆகா! மூங்கில் இலை நுனியில் இருக்கும் பனித் துளியை, எவ்வளவு அழகாகப் பாடி விட்டார்கள் இந்த ஏற்றப் பாட்டுக்காரர்கள்! ஏற்றப்பாட்டிற்கு எதிர் பாட்டு இல்லை” என்று வாய் விட்டுச் சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்தார். ஏற்றப் பாடலை இவ்வாறு ரசித்து ருசித்த கம்பர், ஓர் ஏழையின் உளறலுக்கும் அற்புதமான விளக்கம் சொல்லி, அந்த ஏழையைச் செல்வந்தராக ஆக்கிய கருணை வரலாறும் உண்டு. அது… சோழ மன்னரைப் பாடிப் பரிசை பெற்று, பலரும் வறுமைதீர்த்தார்கள். அதை அறிந்த விறகு வெட்டி ஒருவரின் மனைவி, “நீங்கள் கம்பரிடம் போய்க் கவி கற்று, மன்னரைப்பாடிப் பரிசு பெற்று வாருங்கள்!” என்று ஏவினாள். படிப்பறிவு இல்லாத விறகு வெட்டியும், தம் குடும்ப வறுமை தீர்வதற்காகக் கம்பரைப் போய்ப் பார்த்து விவரத்தைச் சொன்னார்.கம்பர் பார்த்தார், “இந்த விறகு வெட்டிக்கு உடனே கவிபாடக் கற்றுக் கொடுப்பது, சுலபத்தில் நடக்காது” என்று தீர்மானித்து, “விறகு வெட்டியே! கவலைப்படாதே! நாளை சோழமன்னரின் அரசவையில் வந்து, உனக்குத் தெரிந்ததைப் பாடு! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். வீடு திரும்பிய விறகு வெட்டி, மனைவியிடம் நடந்ததையெல்லாம் சொல்லி, “எதை வைத்துப் பாடுவது? எப்படிப்பாடுவது?” எனக் கேட்டார். மனைவியோ, “இதில் என்ன இருக்கிறது? காலையில் அரண்மனைக்குப் போகும்போது, வழியில் பார்க்கும் எதையாவது வைத்துப் பாடுங்கள்! கம்பர் தான் சொல்லியிருக்கிறாரே” என்றாள். மறுநாள், விறகுவெட்டி அரண்மனைக்குப் புறப்பட்டார்.வழியில் சில சிறுவர்கள் மரப்பதுமைகளின் வாயில் மண்ணை ஊட்டி, “மண்ணுண்ணி மாப்பிள்ளையே!” என்று பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த விறகுவெட்டி, அவர்கள் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொண்டார். சற்று தூரம் போனதும், ஒரு காகம் “கா! கா!” என்று கரைவதையும், ஒரு குயில், “கூ! கூ!” என்று கூவுவதையும் பார்த்து, “காவிறையே! கூவிறையே!” என்று மனதில் பதியவைத்துக் கொண்டார் விறகு வெட்டி. மேலும், சற்று தூரம் போனதும், யாரோ பேசிக்கொண்டிருந்த `உங்களப்பன்’ எனும்சொல், விறகு வெட்டியின் காதில் விழ, அதையும் மனதில் பதியவைத்துக் கொண்டார். மேலும், கொஞ்சதூரம் சென்றவுடன், வழியில் இருந்த கோயில் ஒன்றில், ஒரு பெருச்சாளி ஓட, அதைப் பார்த்த விறகுவெட்டி `கோவில் பெருச்சாளி’ என்ற வார்த்தைகளையும் மனதில் பதிய வைத்துக் கொண்டு, மனப்பாடம் செய்த படியே வந்தார்.அப்போது விறகுவெட்டியின் நண்பர் ஒருவர் எதிரில் வர, அவரைப் பார்த்த விறகுவெட்டி அவரிடம் தன் மனதில் இருந்ததை அப்படியே வரிசையாகச்சொல்லி, “எப்படி என் பாட்டு?” எனக் கேட்டார். நண்பரோ, “கன்னா பின்னா மன்னா தென்னா என்று, நீயும் ஒரு கவி பாடி விட்டாயே!” என்று சொல்லிச் சென்றார். அதையும் மனதில் பதிய வைத்துக்கொண்ட விறகு வெட்டி, `சோழரங்கப் பெருமாளே!’ என்று மன்னர் பெயரையும் சேர்த்துக் கொண்டு அரண்மனை அடைந்தார். அரசவையில் மன்னரும் கம்பர் முதலான புலவர்களும், அமர்ந்திருப்பதைக் கண்ட விறகுவெட்டி, அனைவரையும் வணங்கி, “நான் அரசர் மேல் பாடல் பாட வந்திருக்கிறேன்” என்றார். விறகு வெட்டியைப் பார்த்த கம்பர் புரிந்து கொண்டார். உடனே அவரை ஓர் ஆசனத்தில் அமர வைத்து, பாடுமாறு கூறினார். கம்பர் இருந்த தைரியத்தில் விறகு வெட்டியும், தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை அப்படியே கூறினார்.மண்ணுண்ணி மாப்பிள்ளையேகாவிறையே கூவிறையேஉங்களப்பன் கோவில் பெருச்சாளிகன்னா பின்னா மன்னா தென்னாசோழ ரங்கப் பெருமாளேஎன்று விறகு வெட்டி பாடி முடித்ததும், அவையில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். அதைக்கண்ட கம்பர் இரக்கத்துடன் எழுந்து, “புலவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்? ஏழைப்புலவர் ஒருவரின் பாட்டை இகழ்வது சரியா? அதில் உள்ள பொருளின் ஆழத்தைக் காண வேண்டாமா?” என்றார். அப்போது ஒரு புலவர், “அப்படியானால், நீங்களே அப்பாடலுக்கு விளக்கம் சொல்லலாம்” என்றார். கம்பர் கூறத் தொடங்கினார்;“மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்பது, மண்ணை உண்ட திருமாலுக்கு (கண்ணனுக்கு) ஒப்பானவனே என்று பொருள் படும். மாப்பிள்ளையே என்பதில், மா-திருமகளின், பிள்ளையே என்பது திருமகளின் பிள்ளையான மன்மதனையும் குறிக்கும். கா-இறையே என்பது, கற்பகச் சோலைக்கு அரசனான இந்திரனைக் குறிக்கும். கூ-இறையே என்பது, நில உலகிற்கு அரசனே என்பதைக்குறிக்கும். உங்களப்பன் என்பது, உங்கள் தந்தை என்றும், கோயில் பெருச்சாளி என்பது, அரசன் விற்போரில் பெரியசிங்கத்துக்கு ஒப்பானவன் என்றும் பொருள்படும். ”அது மட்டுமா? கன்னா என்பது கர்ணனையும், பின்னா என்பது, கர்ணனுக்குப் பின் பிறந்த தர்மரையும், மன்னா என்பது, என்றும் நீண்ட ஆயுளை உடையவனே என்றும், தென்னா என்பது, தமிழ் வளர்ச்சியில் பாண்டியனுக்கு நிகரானவனே என்றும், சோழ ரங்கப் பெருமாளே என்பது, சோழ நாடாகிய அரங்கத்தை உடைய பெருமை கொண்டவனே என்றும் பொருள்படும்.“ஆக மொத்தத்தில், `திருமாலை ஒத்தவனே! அழகில் மன்மதனைப் போன்றவனே! போகத்தில் இந்திரனைப் போன்றவனே! இந்நில உலகின் அரசனே! உன் தந்தை விற்போரில் சிங்கத்தை ஒத்தவன். நீயோ கொடையில் கர்ணனுக்கும், பொறுமையில் தர்மருக்கும், தமிழ் வளர்ச்சியில் பாண்டியனுக்கும் சமமாவாய். சோழநாட்டுப் புலவர்கள் விரும்பிக் கூடும் பெரிய அரங்கமாய் விளங்கும் பெருமை உடையவனே! என்பதே அந்த ஏழைப்புலவர் பாடிய பாடலின் பொருள். இதை உணராமல் அவரை இகழலாமா?” என்று முடித்தார் கம்பர். மன்னர் புரிந்து கொண்டார். பாடியவர் மூடனாக இருந்தாலும், கம்பரின் சிறந்த விளக்கத்திற்காக, விறகு வெட்டிக்கு, ஏராளமாகப் பரிசுகளைத் தந்து அனுப்பி வைத்தார். பிறகு கம்பர் தன் மாணவர்கள் மூலமாக, விறகு வெட்டியைச்சிறந்த புலவராகச் செய்தார். ஓர் ஏழையின் மீது கம்பருக்கு இருந்த கருணையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உண்மையான கல்விமான்கள் செயல்பட வேண்டிய முறையையும், சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு இருந்த கம்பருக்கு அரண்மனையில் ஒரு பிரச்சனை முளைத்தது. அதைக் கலைமகளே வந்து தீர்த்துவைத்தாள். அத்தகவல்…கம்பருடைய மகன் அம்பிகாபதியும், சோழ மன்னரின்மகள் அமராவதியும், ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். அத்தகவல், மன்னரின் காதுகளை எட்டியது. அதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்த மன்னர், அந்த விருந்திற்குக் கம்பரையும் அம்பிகாபதியையும் அழைத்தார். விருந்து மண்டபத்தில், கம்பர் முதலானோர் வந்து அமர்ந்திருக்க, மன்னர் ஏற்பாட்டின்படி அமராவதி உணவு பரிமாறவந்தாள். வந்த அவளைக் கண்டவுடன், ‘‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்த மருங்கசைய” எனப்பாடத் தொடங்கி விட்டான் அம்பிகாபதி. அவன் பாடியது அமராவதியைத் தான் என்பது, அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.கம்பரும் நிலையை உணர்ந்தார். விபரீதம் விளையப்போகிறது என்பதை அறிந்து மனமாரக் கலைமகளை வேண்டி, அம்பிகாபதி பாடிய பாடலை ஒட்டியே, ‘‘கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்” என்று பாடினார்.அதாவது, அமராவதியை நினைத்து அம்பிகாபதி பாடிய பாடல், கம்பரால் கொட்டிக் கிழங்கு விற்கும் பெண்ணை எண்ணிப் பாடிய பாடலாக முற்றுப் பெற்றது. அனைவரும் குழம்பினார்கள். கம்பரோ, ‘‘இப்பாடல், இடுப்பிலே கொட்டிக்கிழங்கு நிறைந்த கூடையைச் சுமந்த படி, கால்கள் கொப்பளிக்க, கொட்டிக்கிழங்கைக் கூவிக்கூவி விற்கும், முதியவள் ஒருவளைக் குறித்துப் பாடப்பட்டது” என்றார். அதே சமயம், கம்பரைக் காப்பதற்காகக் கலைமகளே, கொட்டிக்கிழங்கு நிறைந்த கூடையைச் சுமந்தபடி, முதியவள் வடிவில் அங்கு வந்தாள். கலைமகள் கருணையால் கம்பரின் பிள்ளை அங்கே காப்பாற்றப் பட்டான்.ஒரு சாதாரண விறகு வெட்டியிடம் கம்பர் காட்டிய கருணை, அவர் பிள்ளையைக் கலைமகளால் காக்கச் செய்தது. தெய்வீக நிலை பெற்ற, இப்படிப்பட்ட மாபெரும் கவிஞர்கள் பலர் தோன்றி, பற்பல நூல்களை எழுதி நமக்காகத் தந்திருக்கிறார்கள்.பி.என்.பரசுராமன் …

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!