கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொன்ற விவகாரம் சிசிடிவி பதிவுகளுடன் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்: கொலையாளியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை: கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த விவகாரத்தில், சிசிடிவி ஆதாரத்தை வைத்து கொண்டு சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதையடுத்து காதலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமலட்சுமி(43), ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்து வருகிறார். இவரது கணவர் மாணிக்கம் (47). கால் டாக்சி டிரைவர். இவர்களுக்கு 3 மகள்கள். இதில் சத்யா(20) என்பவர் மட்டும் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் படித்துவந்தார். இந்நிலையில் மாணவி சத்யாவை அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகன் சதீஷ் (24),  பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்தபடி தன்னை தன் காதலை ஏற்கும்படியும், திருமணம் செய்யும் படியும் வற்புறுத்தினார். ஆனால், தன் பெற்றோர் பார்த்து முடிவு செய்பவரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று சத்யா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், நடைமேடையில் நின்று இருந்த சத்யாவை எட்டி உதைத்ததில், அவர் ரயில் முன்பு தண்டவாளத்தில் விழுந்ததில், அவரது உடல் 2 துண்டாகி இறந்தார். இதையடுத்து செல்போன் சிக்னல் உதவியுடன் சதீஷ் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டான். அதற்குள் மகள் மேல் இருந்த பாசத்தில் தந்தை மாணிக்கம் மதுவில் மயில்துத்தம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாம்பலம் போலீசார் விசாரித்து வந்த கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து ரயில்வே போலீசார் ஆவணங்கள், சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவற்றை சிபிசிஐடி போலீசாரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், முதற்கட்டமாக சத்யா வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் வழியில் உள்ள சிசிடிவி பதிவுகள், சத்யா பயன்படுத்திய செல்போன், குற்றவாளி சதீஷ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தின் போது சத்யா உடன் இருந்த தோழி மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கொலையாளி சதீஷை, சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு