கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!

நன்றி குங்குமம் தோழி குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விளையாட்டு, நடனம், பாட்டு போன்ற கலைகளின் துணை கொண்டு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில் தான் கற்ற பரதநாட்டியத்தின் அடிப்படையில் நடனம் மற்றும் கல்வியை ஒருங்கிணைக்கும் நோக்குடன் செயலாற்றி வருகிறார் பரத நாட்டிய கலைஞர் ரூபா.‘‘பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த ஆறு மாதமாக பி.எச்.டி படித்து வருகிறேன். இதற்கு முன் இரண்டு ஆண்டுகள் அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வேலை பார்க்கும் போது தான் அங்கிருக்கக்கூடிய பசங்களுக்கு பரதநாட்டியம் போன்ற கிளாசிக்கல் ஆர்ட்ஸ் மட்டுமின்றி நாட்டுப்புற கலைகள் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக இருந்ததை தெரிந்து கொண்டேன். மற்ற பாடங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும் நடனம் பற்றிய செய்திகளை அவர்களிடத்தில் கொண்டு சேர்த்தேன். பாடம் கற்றுக் கொடுக்கும் போதே நடனத்தோடு பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். ரொம்பவும் ஆழமாக சொன்னால் மதம் சார்ந்தும், பழங்கால கலை என்று விமர்சனம் வைக்கப்படும். எனவே கணக்கு, அறிவியல் பாடங்கள் எடுக்கும் போது மட்டும் அதனுடன் நடனமும் சேர்த்துக் கொள்வேன்.ஏனெனில் கணிதத்திற்கென்று ஒரு ரிதம் இருக்கிறது. அதே போல் நடனம், பாடல் என கலை சம்பந்தமான அனைத்து ரிதத்திற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இது இரண்டையும் இணைக்கும் போது மாணவர்களும் எளிதாகவும், அதே வேளையில் ஆர்வமாகவும் கற்றுக் கொண்டனர். இது அறிவியலுக்கும் பொருந்தும். சமூக அறிவியல் பாடம் எடுக்கும் போது அதில் வரலாறு குறித்த பாடம் நடத்தும் போது, பாடத்திலிருந்து விலகாமல், அந்தந்த கால கட்டங்களில் என்னென்ன இசைக் கருவிகள், கலைகள் எல்லாம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் கூடுதலாக கற்றுக் கொடுத்தேன். இதன் மூலம் பாடத்தோடு கலை சம்பந்தமான ஆர்வத்தையும் உருவாக்கினேன். இவ்வாறு சொல்லி கொடுக்கும் போது வெறும் வார்த்தை மற்றும் கரும்பலைகையில் எழுதி போடுவதோடு மட்டுமல்லாமல் சில நடன அசைவுகள் சேர்த்தும் சொல்லி கொடுத்தேன். இது மாணவர்களுக்கு எளிதில் பாடம் கற்க உதவியதை கண் கூடாக பார்த்தேன். எனவே தான் இதனையே ஆய்வு பாடமாக எடுத்து படிக்கலாம் என்று இப்போது பி.எச்.டி படித்து வருகிறேன்” என்கிற ரூபா, ‘கலா ரூபம்’ என்கிற நடனப் பள்ளியை  நடத்தி வருகிறார். ‘‘பள்ளியில் உருவான யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கான ஆய்வுகளோடு சரியான முறையில் கொடுக்க வேண்டும். அதற்காகவே என் யோசனைகள் எல்லாம் பரிசோதனை செய்து, இது சரியா? தவறா என பார்ப்பதற்காக ஒரு குழு தேவைப்பட்டது. அதோடு நான் கற்று வைத்திருக்கும் நடனக் கலையையும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இவை இரண்டும் நான் நடன வகுப்பு ஆரம்பிப்பதற்கான புள்ளியாக அமைந்தது. தியரியாக பி.எச்.டியில் படிப்பதை, பிராக்டிக்கலாக செய்து பார்ப்பதற்கு இந்த நடன வகுப்பு பயன்படுகிறது” என்கிற ரூபா, தனக்கு நடனத்தின் மீது ஆர்வம் வருவதற்கான காரணங்களை பகிர்ந்தார். “பள்ளி படிப்பெல்லாம் கல்பாக்கத்தில் தான் படித்தேன். ஸ்டேஜில் கலர்ஃபுல்லா  எல்லோரும் ஆடும் போது பார்க்க ரொம்ப பிடிக்கும். அந்த இடத்தில் நானும் இருக்கணும்னு ஆசை. எனவே எல்லோரும் சேர்வது போல் நானும் நான்காம் வகுப்பில் நடன வகுப்பில் சேர்ந்தேன். மேடை ஏறும் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவு தான். இதே துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் அப்போது இருந்ததில்லை. எங்களுக்கு கற்றுக் கொடுக்க திவ்யசேனா அவர்கள் சென்னையிலிருந்து கல்பாக்கம் வந்து கற்றுக் கொடுப்பார்கள். அவங்க தான் எப்போதும் எனக்கு குரு. சென்னையில் சபாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அழைத்து வருவார்கள். வெறும் நடனத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அதன் முக்கியத்துவம் எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள்.   அதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகுதான் பரதம் என்பது எவ்வளவு பெரிய கலைன்னு எனக்கு புரிந்தது. வரும் காலத்தில் நம்முடைய பங்கும் இந்த துறையில் இருக்க வேண்டுமென முடிவெடுத்தேன். 2009ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பெரிய அரங்கில் அரங்கேற்றமும் செய்தேன். அதன் பின் என்னுடைய நடன வகுப்பிலேயே கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பார்ட் டைமாக வேலை பார்த்து கொண்டே விஷ்வல் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மீடியா பாடங்களில் பட்டம் பெற்றேன். இதனோடு டிப்ளமோ இன் டான்ஸ், எம்.ஏ. டான்ஸ் பாடங்களை தொலை தூரக் கல்வி மூலம் தேர்ச்சி பெற்றுள்ளேன்.  இதற்கடுத்து அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் போது நடனம் மூலம்  என்னென்ன சாத்தியமோ அதை முன்னெடுத்தேன். கதைகள் எல்லாம் பரதநாட்டியத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் கொண்டு சொல்லி கொடுக்கலாம், ஒரு புதிய கதையும் எப்படி உருவாக்கலாம் என முயற்சியும் செய்தோம். இதே போல் பாடத்தில் உள்ள தமிழ், ஆங்கில கவிதைகளுக்கு முத்திரையை பயன்படுத்துவது குறித்தும் ெசால்லித் தருவேன். முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிற சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து எதெல்லாம் நடனத்திற்கு தொடர்பு இருக்கோ அதை வடிவமைத்து வருகிறேன். குழந்தைகளுக்கு வெறும் மனப்பாட கல்வி மட்டுமே இருக்கிறது. அதை கொஞ்சம் பிரேக் பண்ணி அவர்களுக்கு வாழ்க்கைக்கான பயனுள்ள விஷயத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். நடனம் கற்றுக் கொள்ளும் போது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. பாடமும் நடனமும் சேர்ந்து சொல்லி கொடுக்கும் போது பெரிய முன்னேற்றம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.  குழந்தைகளுக்கு எமோஷ்னல் டெவலப்மென்ட் மற்றும் இன்ெடலிஜென்ட் தேவைன்னு ஆராய்ச்சியில் சொல்றாங்க. வழக்கமான பள்ளி சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு! எல்லாமே பாடமாக மட்டுமே படிக்கிறோம். செயல்முறையில் செய்ய நாடகம், நடனம், பாட்டு, இசை போன்ற கலை சார்ந்த விஷயங்கள் முக்கியம். நம் கல்வி முறை அப்படி தான் இருந்திருக்கிறது. நடுவில் கொஞ்சம் திசை மாறியுள்ளோம். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி நம் வேரை தேடிப் போய்க் கொண்டிருக்கிறோம். பாடத்திட்டத்தில் இவை கலை வடிவங்களாக மட்டுமே இல்லாமல் பாடத்திட்டமாகவே கொண்டு வர வேண்டும்” என்கிற கோரிக்கையினை முன் வைக்கிறார் நடன கலைஞர்  ரூபா. தொகுப்பு: அன்னம் அரசுபடங்கள்: ஜி.சிவக்குமார்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!