கலையரங்க பயிற்சி விவரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும் சிஇஓக்களுக்கு மாநில திட்ட இயக்குனர் உத்தரவு அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான

வேலூர், ஜூலை 16: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலையரங்க பயிற்சி அளிப்பதற்கான விவரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும் என சிஇஓக்களுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடத்தப்படும். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும் கலைப்பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரங்க பயிற்சி 2022-23ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன்முலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் உட்பட 28.5 லட்சம் மாணவர்கள் 206 கலைத்திருவிழா போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல்வரால் கலையரசி, கலையரசன் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டைப்போலவே, இந்தாண்டும் அனைத்து அரசு, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 கலை வடிவங்களில் நடனம், நாட்டுப்புறக்கலை, இசை, காட்சிக்கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள கலை வடிவங்கள், அக்கலை வடிவங்களை கற்பிக்க அப்பள்ளிக்கு தேவையான கலைஞர்களின் எண்ணிக்கை, கலைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகள் விவரம் மற்றும் பல விவரங்கள் கைப்பேசி செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இச்செயலியானது தற்போது இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளமையால், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், முழு நேர வாய்ப்பாட்டு ஆசிரியர்கள் மற்றும் கலை சார்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை பயன்படுத்தி முதற்கட்டமாக அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் கலை அரங்கம் பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எமிஸ் தரவுதளம் வாயிலாக பெறப்பட்டுள்ள 5,038 அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் முழு நேர கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார அலுவலர்கள் 8,049 பள்ளிகளில் கலையரங்கம் செயல்படுவதனை உறுதிசெய்து பள்ளி பார்வை செயலில் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது