கலைத்திருவிழாவில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும்

வேலூர், அக்.21: அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் கலைத்திருவிழாவில் தீப்பற்றக்கூடிய பொருட்களை போட்டிகளில் பயன்படுத்த கூடாது என்று என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையின் கீழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்போது வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கலைத்திருவிழா நடைபெறும் பள்ளிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று கலந்துகொள்ளுதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதி உள்ள இடங்களில் அமைந்த பள்ளிகளில், கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் உயிருக்கோ, உடமைக்கோ எந்தவித விபத்தும் ஏற்படாத வண்ணம் பழுதடையாமல் நல்ல நிலையில் உள்ள உறுதியான கட்டிடங்கள் கொண்ட பள்ளிகளின் வகுப்பறைகள், அரங்குகள், விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நல்ல காற்றோட்ட வசதி இருத்தல் வேண்டும். தனியாக அரங்கு அமைக்கும் நிலையில் பொது பணித்துறை அனுமதி பெறுதல் வேண்டும். போட்டிகள் நடைபெறும் பள்ளிக்கு அருகில் திறந்த, பாழடைந்த கிணறு, குளம் மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள் இல்லாத வண்ணம் தெரிவு செய்ய வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் கிணறு இருக்கும் பட்சத்தில் அதனை நன்கு கம்பி வலை கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

போட்டி நடைபெறும் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், செப்டிங் டேங்க் ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி, எப்போதும் மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். மாடி படிக்கட்டுகளில் உள்ள கைப்பிடி அமைப்பின் மீது மாணவர்கள் முத்துவை சறுக்கி விளையாடுவதை தவிர்க்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளுக்கு உள்ளும், வெளியேயும் ஆசிரியர் கண்காணிப்பு பணியில் இருத்தல் வேண்டும்.

தீ மற்றும் மின் விபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, தீ அணைப்பு கருவிகளான தீயணைப்பான், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட்ட வாளிகள் போட்டிகள் நடைபெறும் இடங்களில் எப்போதும் தயார் நிலையில் அவசர உபயோகத்திற்கு உதவும் வகையில் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தேவையற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை போட்டிகள் நடைபெறும் இடங்களில் வைத்தல் கூடாது. தகுதியான பணியாளர்களைக் கொண்டு போட்டிகள் நடைப்பெறும் பள்ளிக் கட்டிடத்தின் மின் இணைப்புகளும், கம்பங்களும், மின்கசிவின்றி பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அறுந்த துண்டித்த நிலையில் மின்சார ஒயர்கள் இருப்பின் அவைகள் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும். எப்போட்டிகளிலும் எக்காரணத்தை கொண்டும் நெருப்பு, எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் கூர்மையான பொருட்களை போட்டிகளில் பயன்படுத்திட கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்