கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2ம் கட்ட முகாம்கள் தொடங்கியது குமரியில் 364 இடங்களில் நடக்கிறது

நாகர்கோவில், ஆக.6: குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2ம் கட்ட முகாம்கள் நேற்று தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 16ம் தேதி வரை 364 இடங்களில் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம்தேதி வரை நடைபெற்றது. முதல்கட்டத்தில் 384 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 782 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு 2 லட்சத்து 56 ஆயிரத்து 462 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் நடக்கிறது. இரண்டாம் கட்ட முகாம் நடைபெறுகின்ற பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டதுடன் டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட முகாம் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 16ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் 364 இடங்களில் நடக்கிறது. இதற்காக 2 லட்சத்து 72 ஆயிரத்து 782 விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற ரேஷன் கடையில் உள்ள ரேஷன்கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு 500 குடும்ப அட்டைக்கும் ஒரு விண்ணப்ப பதிவு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 1400 குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் மூன்று விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்ப பதிவு விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நியாய விலை கடைப்பகுதி விண்ணப்ப பதிவு முகாமின் பொறுப்பு அலுவலராக கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், மக்கள் நல பணியாளர், நகராட்சி பகுதிகளில் வரி வசூலிப்பாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் போன்ற நகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும், விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பதற்கும் ஒரு உதவி மைய தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுய உதவி குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், தமிழ்நாடு சுகாதார வாழ்வாதார இயக்க பணியாளர்கள் உதவி மைய தன்னார்வலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு
திருவட்டார் தாலுகா திருநந்திக்கரை பகுதியில் அமைந்துள்ள தேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட முகாமினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட கலெக்டர் தர் தலைமையில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை 5.70 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் முகாம் துவங்கிய நாளிலிருந்து இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளார்கள். இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே 384 நியாயவிலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் வரும் 16-ம் தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி, கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆய்வில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் தாசில்தார் முருகன், அரசு வழக்கறிஞர் ஜாண்சன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுலவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை