கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

புதுக்கோட்டை,செப்.25: புதுக்கோட்டையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே போட்டி நடத்தி கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக கட்சியில் உள்ள ஒவ்வொரு அணியும் புதுமையான முறைகளில் கொண்டாடி வருகிறது. அதே சமயம் கலைஞர் நூற்றாண்டு விழாவை கட்சி நிர்வாகிகள் மட்டும் கொண்டாடுவதுடன் நின்று விடாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் கலை, இலக்கியம், பேச்சு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் போட்டிகள் நடத்த திமுக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணை செயலாளரும், மத்திய மண்டல பொறுப்பாளருமான எழில்மாறன் செல்வேந்திரன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். முன்னதாக வடக்கு மாவட்ட அமைப்பாளர் செந்தாமரைப்பாலு வரவேற்றார். கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒன்றிய வாரியாக உள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களை கொண்டு மாவட்ட அளவில் போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு நடத்தப்பட்டு மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகளிடையே நூற்றாண்டு காணும் சமூக நீதி தலைவர் மு. கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர். கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர்கள் சுப்பிரமணியன், பாபு ஜான், வடக்கு, தெற்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மேகநாதன் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்