கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர், ஜூன் 27: மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்கமாக அரண்வாயலில் உள்ள யுனைடெட் புருவரிஸ் லிமிடெட் தொழிற்சாலை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சாலை பொது மேலாளர் மகேஷ், மனிதவள மேலாளர் செந்தில்குமார், பாதுகாப்பு மேலாளர் சித்ரா, மேற்பார்வை மேலாளர் தினகரன், உற்பத்தி மேலாளர் அன்பழகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத்தை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு மஞ்சப் பையை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை பாதுகாப்பு உறுதிமொழியை கூடுதல் கலெக்டர் வாசிக்க, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்