கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த குழு: வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் பட்ஜெட்டில் உரையாற்றியபோது, ‘தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்’ என்று குறிப்பிட்டார். அதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ளார். அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்று அதை அங்கீகரித்து உத்தரவிடுகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அம்ரூத், ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவை முறையே 28 பெரிய நகரங்கள் மற்றும் 11 மாநகராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஒப்பிட்டால், மாநகராட்சிகளில் இந்த திட்டங்கள் அதிக அளவில் செயல்பாட்டில் உள்ளன. எனவே உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்பும் வகையில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து நகர்ப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, பாதுகாப்பான கழிவுநீர் அகற்றல் முறை, தெரு விளக்குகள், நல்ல சாலை வசதிகள் அமைத்துத் தர வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். இந்த வசதிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள சில முக்கிய பகுதிகளில் மட்டுமே உள்ளன.நகர்ப்புறங்களின் குடிசை பகுதிகள், பின்தங்கிய பகுதிகள், புதிய நகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதுபோன்ற பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சீரான அடிப்படை வசதிகள் அளிக்கப்படவில்லை. சில வார்டுகள், பகுதிகளில் அவை குறைபாடுகளுடன் உள்ளன. எனவே இதை சீராக அமைப்பதற்கான விரிவான சர்வே, வார்டு வாரியாக எடுக்கப்படும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சியிலும் நகர மேம்பாட்டுத் திட்டம் தயார் செய்யப்படும்.அந்த பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், சாலைகள், உள்புற சாலைகள், தெரு விளக்குகள், கல்லறை அல்லது எரிமேடை வசதிகள் உள்ளிட்ட சமூக வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  மேலும், குறைந்தபட்சம் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் அமைக்கவும், குடிசைப் பகுதிகள், பிற்படுத்தப்பட்ட பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள், பொதுப் பகுதிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கான நிதிப் பகிர்வு முறைகளை முடிவு செய்வதற்காக திட்ட நிதி அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை