கலைஞர் ஆட்சியின் சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 5 முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்காக எத்தனையோ அற்புதமான திட்டங்களை தலைவர் கலைஞர் நிறைவேற்றி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை சூட்டி, அவர்களுக்கு ஒரு நலவாரியம் ஏற்படுத்திக் கொடுத்தார்,  திருநங்கைகளுக்கு நல வாரியம் உருவாக்கி தந்தார், கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’, ‘நமக்கு நாமே’ திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ‘சமத்துவபுரம்’ திட்டத்தை தந்தை பெரியார் பெயரில் ஏற்படுத்திக் கொடுத்தார்.பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு புரட்சிகர திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு திட்டங்களை நாம் தொடர்ந்து அடுக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நேரமில்லை. ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை கவனிப்பது போல தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் கவனித்து அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கலைஞருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறேன். இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா?ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் ஏற்கனவே 2011ம் ஆண்டு-2016ம் ஆண்டில் ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னார்கள். இப்போது 60 ரூபாய். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது. நான் உறுதியோடு சொல்கிறேன். எவ்வாறு கலைஞர் சொன்னதைச் செய்தாரோ அதே போல, அவருடைய மகனும் சொன்னதைத் தான் செய்வான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்போது  நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன், 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதிமுக வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் வெற்றி தான். தலைவர் கலைஞரின் இறுதி விருப்பம் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைச் செய்ய விடவில்லை. இதே பழனிசாமி வீட்டிற்கு நான் சென்றேன். கலைஞர் சாதாரண தலைவர் அல்ல, 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டிற்கு பல ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த நயவஞ்சகர்கள் அவர்கள். அதற்குப் பிறகு நாம் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் அவரை அடக்கம் செய்தோம். எனவே உங்களையெல்லாம் நான் அன்போடு உரிமையோடு கேட்க விரும்புவது, நம்முடைய தலைவர் கலைஞருக்கு அவர்களுக்கு இடம் கொடுக்காத இந்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? நன்றாகச் சிந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். * கும்மிடிப்பூண்டியில் சிப்காட்திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், மீஞ்சூர் – பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை  திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும்  நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரியபாளையம் பவானி  அம்மன் கோவில் அருகில் சுற்றுலாத் தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர்பதனக் கிடங்கு உருவாக்கப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதி மொழிகளைச் சொல்லி இருக்கிறோம்’ என்றார்.* விஷம் போல ஏறிய விலைவாசிதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உளுத்தம் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய்-இப்போது 120, துவரம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய் – இப்போது 120, கடலை பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ  34-இப்போது 150, பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 48 – இப்போது 126, சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 18-இப்போது 40, சிலிண்டர் ஒன்று  தி.மு.க. ஆட்சியில் 400 – இப்போது 900, பால் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில்35 – இப்போது 60. இப்படி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றார்….

Related posts

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்