கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1334 பயனாளிகளுக்கு வீடுகள்

ஊட்டி, செப். 29: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் 1334 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி அருகே காத்தாடிமட்டம் பகுதியில் ‘கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின் கலெக்டர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டப்பட்டு தந்து வருகிறது. அந்த வகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-2025ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவு தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும் விதம் உள்ளிட்டவற்றை கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் 19-02-2024 அன்று வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட் (ஆர்சிசி.,) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும், தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், 2024-25 நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பில், 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கி, அரசால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும் எனவும், இதில், 300 சதுர அடி கான்கிரீட் (ஆர்சிசி.,) கூரையுடனும், எஞ்சிய 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்க வேண்டும். ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் எனவும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு மட்டும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 267 பயனாளிக்கும், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 152 பயனாளிகளுக்கும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 278 பயனாளிகளுக்கும், கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 637 பயனாளிகளுக்கும், என மொத்தம் 1334 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்படுகிறது. இதில், தற்பொழுது வரை 1229 பயனாளிக்கு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது, வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், குந்தா வட்டாட்சியர் கலைச்செல்வி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சலீம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து