கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தில் 175 பணிகளுக்கு ஒப்புதல்

சிவகங்கை, மே 11: சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 175 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்தார். சிவகங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில், வேளாண் பொறியியல்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மகாசிவனேந்தல் வரத்துக் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு தேர்வு செய்யப்பட்ட 10 முதல் 15 ஏக்கர் சிறு, குறு விவசாயிகளின் நிலப்பரப்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் சோலார் அல்லது மின் இணைப்பு 100 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.

ஆதி திராவிட விவசாயிகளின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் மானியத்தில் சோலார் அல்லது மின் இணைப்புடன் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படுகிறது. இத்திட்டம் வாயிலாக பண்ணைக்குட்டைகளும் அமைத்து தரப்படுகிறது. இது தவிர, பஞ்சாயத்துக்குட்பட்ட வரத்துக் கால்வாய், ஊரணி மற்றும் சிறுபாசன குளங்களை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 80 தூர்வாரும் பணிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 12 சிறுபாசன குளங்கள், 32 ஊரணிகள் மற்றும் 34 வாய்க்கால் தூர்வாரும் பணிகள் என மொத்தம் 78 பணிகள் ரூ.34 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 175 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகளை விரைவாக தரமான முறையில் முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் இந்திரா, உதவிப்பொறியாளர்கள் பிரிதிவிராஜ், சண்முகநதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி