கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள், காவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்

கரூர், ஏப். 17: பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் தபால் வாக்கு அளிக்க அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிக்கு பொறுப்பேற்று வெளியூர் செல்வதால் தங்கள் ஜனநாயக கடமை (வாக்குரிமை) ஆற்றுவதற்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் நேற்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர். தபால் வாக்கு அளிப்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர், ஏப். 17: திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகளில் வெளிநபர்கள் எவரும் தங்க அனுமதி இல்லை. இன்று 6 மணிக்குள் பிரசாரம் முடிக்க வேண்டும். அனைவருக்கும் சம்பளத்துடன் 19ம் தேதி விடுமுறை அளிகக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து பணியாளர்களும் வாக்களிக்கும் விதமாக அரசு அலுவலகங்கள், தனியார் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17ம் தேதி) மாலை 6 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் 23.கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத வெளிநபர்கள் தொகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை தவிர வெளிநபர்கள் எவரும் தங்க அனுமதி இல்லை.

வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச் சாவடி மையத்திற்கு வரும் பொழுது 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்து வாக்குகளை பதிவு செய்யலாம்.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, கணக்குப் புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), மருத்துவ காப்பீட்டு அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது), ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை , ஸ்மார்ட் கார்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது.

இந்திய கடவுச் சீட்டு, ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது). வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச் சாவடி மையத்திற்கு வரும் பொழுது ஏதாவது ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்