‘கலியுக அம்பேத்கரே வருக’ என பேனர் வைத்த பாஜகவினர் எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம் வந்தவாசியில் அண்ணாமலையை வரவேற்று

வந்தவாசி, பிப்.4: வந்தவாசியில் அண்ணாமலையை வரவேற்று ‘கலியுக அம்பேத்கரே வருக’ என பாஜவினர் வைத்திருந்த பேனருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். புதிய பஸ் நிலையம் இணைப்பு சாலையில் இருந்து பஜார் வீதி, பழைய பஸ்நிலையம், ஆரணி சாலை வழியாக செய்யாறு செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக நகரம் முழுவதும் பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர். இதில் அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் ‘கலியுக அம்பேத்கரே வருக’ என அண்ணாமலையை வரவேற்று அவரது கட்சியினர் நேற்று பேனர் வைத்தனர். இதனைக்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரஅமைப்பாளர் விஜய், மாவட்ட துணை அமைப்பாளர் டேனியல், இந்திய குடியரசு கட்சி மாநில அமைப்பு செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், புரட்சி பாரத மாவட்ட செயலாளர் ஜோசப் உள்ளிட்ட தலித் அமைப்பினர் ஆகியோர் வந்து, பேனர் எதிரே கூடினர்.

பின்னர் பேனரை அகற்றவேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி ராஜிவ், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அம்பேத்கருக்கு நிகர் அப்பேத்கர்தான் வேறுயாரையும் எங்களால் அம்பேத்கர் போன்று பார்க்க முடியாது. அண்ணாமலை கலியுக அம்பேத்கரா? பேனரை அகற்ற வேண்டும். வேறு சமரசத்திற்கு வழியில்லை எனக்கூறி கோஷம் எழுப்பினர். அதற்கு போலீசார் பேனரில் உள்ள வாசகத்தை எடுக்கலாம். ஆனால் அம்பேத்கர் படம் வைக்க கூடாது என நாங்கள் கூற முடியாது என்றனர். அதற்கு தலித் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பாஜக நகர செயலாளர் சுரேஷை அழைத்து போலீசார் கூறியதால் அந்த பேனரை பாஜகவினர் எடுத்துச்சென்றனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்