கலசபாக்கம் அருகே பிரசித்திபெற்ற பர்வதமலையில் சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

கலசபாக்கம் :  கலசபாக்கம் அருகே பிரசித்திபெற்ற பர்வதமலையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இணைந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என பக்தர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதி பர்வதமலையில் 4,560 அடி உயரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தமிழக அரசு பக்தர்களின் வசதிக்காக தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இருப்பினும் பர்வதமலையில் பெரும்பாலான பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு போதிய கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் பர்வதமலைக்கு சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் கஞ்சா அடிப்பது, வன விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வனத்துறையினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் முழுமையாக கண்காணிப்பதில்லை. அதேபோல் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சமூக விரோதிகள் அடிக்கடி பர்வதமலையில் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். இதனால் விலைமதிப்பில்லா மூலிகைகள் வீணாகிறது.பர்வத மலையில் போதிய கண்காணிப்பு இல்லாததால்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பர்வத மலையில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். மலையில் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் வனத்துறை முட்டுக்கட்டையாக இருப்பது ஒருபுறம் இருப்பினும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேவையான ஏற்பாடுகளை செய்வதில்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வனத்துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை