கறிக்கடைக்காரரிடம் பணம் எடுத்து தருவதாக ரூ.89 ஆயிரம் அபேஸ்

பொன்னேரி: பொன்னேரி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறி, கறிக்கடைக்காரரின் கணக்கில் இருந்து ரூ. 89 ஆயிரம் நூதன முறையில் எடுத்து சென்ற மர்ம நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னேரி அருகே குன்னம்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (55). இவர், பொன்னேரி பஜாரில் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் மொய்தீன் பணம் எடுக்க நேற்றுமுன்தினம் சென்றுள்ளார். அவர் மெஷினில் ஏடிஎம் கார்டை நுழைத்து பணம் எடுப்பதற்கு தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபரிடம், தனக்கு பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார். அந்தநபரும், மொய்தீனிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, அவரது கார்டில் பணம் வரவில்லை எனக் கூறி, வேறொரு கார்டை கொடுத்துள்ளார். பின்னர், மொய்தீனின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்தை அபேஸ் செய்துவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் மொய்தீனின் செல்போனுக்கு ரூ.89,865 எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. இருப்பினும், இந்த தகவல் அவரது வீட்டில் உள்ளவர்கள் சொல்லிதான் அவருக்கே தெரிய வந்தது.

இதை பார்த்ததும் மொய்தீன், தன்னை அந்த மர்ம நபர் ஏமாற்றி ஏடிஎம் மெஷினில் இருந்த தனது வங்கி கணக்கிலிருந்த பணம் எடுத்து சென்றதை குறித்து பொன்னேரி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையம் உள்பட, சுற்றுவட்டார பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை