கர்நாடகா அத்துமீறி கட்டிய அணையால் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனம் பாதிக்கும்: நீர்வள ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவல்

சேலம்: தென்பெண்ணையாற்று நீர்வழித்டத்தில் கர்நாடக அரசு அத்துமீறி கட்டும் அணையால்,  தமிழகத்தில் 4அணைக்கட்டுகளுக்கு  நீர்வரத்து தடைபட்டு லட்சக்கணக்கான ஏக்கர் பாசனம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் நீராதாரமாக தென் பெண்ணையாறு  விளங்குகிறது. இந்த நிலையில், பெண்ணையாறு உற்பத்தியாகும் பகுதியில் கர்நாடக மாநில அரசு, அத்துமீறி புதிய அணை கட்டியுள்ளது. கடந்த 10ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியில், இந்த அணை கட்டுவதை தடுப்பதற்கு சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, 150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் நீர் சேகரித்தால், தமிழகத்தில் 3 அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து தடைபட்டு, லட்சக்கணக்கான ஏக்கர் பாசனம் பாதிக்கும் என்று நீர்வள ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: கர்நாடக மாநிலம் சிக்கப்பல்லூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கம்-நந்திமலையில் உற்பத்தியாகும் நீரானது ஒசகோட்டம், ஒரத்தூர், தட்சிணப்பினாசினி ஓடை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கொடியாளம் பகுதியில் தமிழகத்தை தொடுகிறது. தமிழகத்தில் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயும் இந்த ஆறானது கொடியாளம் தடுப்பணையை தாண்டி ஓசூர், கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, பாரூர் ஏரிகளை நிரப்புகிறது. அங்கிருந்து தர்மபுரி மாவட்டம்  வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு செல்கிறது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாக பாய்ந்து, கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரிக்கு அடுத்த படியாக நீண்ட தூரம் பாயக்கூடிய ஆறாக தென்பெண்ணையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சின்னாறு, மார்க்கண்டேயா ஆறு, வாணியாறு, பாம்பாறு  போன்ற துணை ஆறுகளின் தண்ணீரும் கலந்து வருகிறது.தென்பெண்ணை ஆற்றுநீரை மையமாக வைத்தே 1995ம் ஆண்டு ஓசூரில் கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. இதில் 481 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த அணையில் இருந்து 21.99 கிலோ மீட்டர் நீளமுள்ள வலதுகால்வாய், 25.5 கிலோ மீட் டர் நீளமுள்ள இடது கால்வாய் வெட்டப்பட்டு 2005 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள 22 கிராமங்களில் 8ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதையடுத்து இந்த நீர், கிருஷ்ணகிரி கேஆர்பி அணையை வந்தடைகிறது. இங்கு 10 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் சேமிக்கப்படும் நீரால் 1,083 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த நீர் தர்மபுரி மாவட்டம் எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கும் வந்தடைகிறது. இதனால் 41 கிராமங்களில் 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ்செங்கப்பாடிவரை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில் இரு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு தலா 115.99 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரானது திருவண்ணாமலை  மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணைக்கு செல்கிறது. இந்த அணையின் இடதுபுற கால்வாயால் திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்களில் 24 ஆயிரம் ஏக்கரும், வலதுபுற கால்வாயால் 21 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இது மட்டுமன்றி திருக்கோயிலூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 88 ஏரிகளில் இந்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் தான், மலையின் மேல்பகுதியில் 150 கனஅடி நீரை தேக்கும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்குள்ள வனப்பகுதியில் 13க்கும் மேற்பட்ட ராட்சத தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பம்பிங் மூலமாக கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு நீரை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழக அணைகளுக்கு வழக்கமாக வரும் நீர்வரத்து தடைபடும். இதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும் பாதிக்கும்  அபாயம் உள்ளது. இதை உணர்ந்து உடனடியாக அரசும், அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் கூறினர்….

Related posts

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு