கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீர் மழை

 

கரூர்: கரூர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான நிலை நிலவியது. கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. தினமும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. அந்த சதப் பட்டியலில் கரூர் மாவட்டம் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த கடும் வெயில் காரணமாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் உச்சத்தில் இருந்தது.

இந்நிலையில், நேற்று 6.30மணியளவில் திடீரென மாவட்டம் முழுதும் பலத்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம், பொரணி, வேலாயுதம்பாளையம், துளசிகொடும்பு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரைமணி நேரத்துக்குமு மேலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கரூர் மாநகர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் 7.30மணியளவில் அரை மணி நேர மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான நிலை நிலவியது. இரண்டு மாதத்துக்கு நிலவிய இந்த சீதோஷ்ணநிலையை மக்கள் சந்தோஷத்துடன் உணர்ந்தனர்.

பலத்த காற்றின் காரணமாக கரூர் தாந்தோணிமலை குறிஞ்சி நகர் மற்றும் ராயனூர் பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்து, குடியிருப்புகளின் சுற்றுச்சுவர் மீது சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து, மின் வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து, அந்த சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் ஒரு மணிநேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டு, பின்னர், சீரமைப்பு முடிவடைந்ததும் மின் விநியோகம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை