கரூர் கோடங்கிப்பட்டி பிரிவு அருகே வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?

கரூர், டிச. 20: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு அருகே வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர்மட்ட பாலம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்போது இந்த பகுதியில் துவங்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், கோடங்கிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூந்துகளும், ராயனூர், பொன்நகர் தாண்டி கோடங்கிப்பட்டி வழியாக சென்று வருகிறது. இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் இந்த பகுதியின் வழியாக கரூர் வந்து செல்கிறது. இதில், கோடங்கிப்பட்டி பிரிவு அருகே கரூர் திருச்சி பைபாஸ் சாலை குறுக்கிடுகிறது. அதிகளவு வாகனங்கள் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் சென்று வருகிறது. இந்நிலையில், கரூர் கோடங்கிப்பட்டி இடையே பைபாஸ் சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த பீதியுடன்தான் கடந்து செல்கின்றனர்.

இந்த பிரிவு சாலையோரம் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டது. இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை மறியல் போன்ற போராட்டங்களை பகுதி மக்கள் நடத்தினர். இந்த பகுதியில் உயர் மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் சேலம் மற்றும் கரூர் திருச்சி சாலையில் முக்கிய சந்திப்பு பகுதிகள் எவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது கரூர் சேலம் பைபாஸ் சாலையில் செம்மடை, பெரியார் நகர், தவிட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி முடிவுற்று பயன்பாட்டில் உள்ளது.

எனவே, இதுபோல, கோடங்கிப்பட்டி பகுதியிலும் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகள் பீதியின்றி கடந்து செல்லும் வகையிலும் உயர்மட்ட பாலம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மேலும், இதே கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பிரிவு பகுதியிலும் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடங்கிப்பட்டி பிரிவு மற்றும் வீரராக்கியம் பிரிவு ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர் மட்ட மேம்பாலம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை