கருர் மாவட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்

கரூர், ஏப். 12: கருர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலபகுதிப்பட்டி மற்றும் மாவத்தூர் ஊராட்சி பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23ம் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23ன் கீழ் ரூ. 12.96 கோடி மதிப்பில் 242 பணிகள் நடைபெற்று வருகிறது. கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 1.36 கோடி மதிப்பில் 25 பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரங்கட்பட்டி ஊராட்சி வையாழிமடை கிராமத்தில் ரூ. 6.36 லட்சம் மதிப்பில் குளத்தின் உட்புற பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் படித்துறை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், தொடர்ந்து இதே பகுதியில் ரூ. 4.12 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மயானக் கொட்டகை பணிகளையும், தரங்கம்பட்டி செல்வ நகர் பகுதியில் ரூ. 2.30 லட்சம் மதிப்பில் முடிவுற்ற சிமெண்ட் சாலை பணிகளையும், மாவத்தூர் ஊராட்சி பகுதியில் கழுத்தாரிக்காபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ 5.80 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மேலப்பகுதி பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளையும், சாலைகள், விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணிகளையும், சமத்துவபுரம் நுழைவு வாயில் பகுதியில் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். மேலும், இந்த பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்தல், தெரு விளக்கு வசதிகள் போன்ற கோரிக்கைகளை கேட்டதற்கு இணங்க அனைத்து வசதிகளையும், உடனுக்குடன் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீரணம்பட்டி பகுதியில் ரூ. 2.70 லட்சம் மதிப்பில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளையும், இதே பகுதிகளில் ரூ. 4.12 லட்சம் மதிப்பில் வெள்ளக்குளம் வாரியில் மழைநீர் உறிஞ்சுக்குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை