கரும்பு வெட்டுக்கூலி உயர்வால் தவிக்கும் விவசாயிகள்: ஆலைகள் ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலை: கரும்பு சாகுபடி லாபகரமாக இருக்கும் என்று நம்பிய விவசாயிகளுக்கு கரும்பு வெட்டுக்கூலி உயர்வு மற்றும் கொள்முதல் விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே ஆலைநிர்வாகம் வெட்டு கூலியை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பிரதான சாகுபடியில் கரும்பு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சுமார் 5 லட்சம் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டு பணப் பயிர் என்பதால் நிலையான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நெல் சாகுபடியை தவிர்த்துவிட்டு கரும்பு பயிரிட்ட விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகம்.ஆனால், விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்துப் போனது. லாபகரமாக இருக்கும் என நம்பிய கரும்பு, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நிலைக்கு மாறிவிட்டது. ஆண்டு முழுவதும் உழைத்தும், கரும்புக்கு கட்டுப்படியான விலை இன்னும் கிடைக்கவில்லை. ஆலைகளும் உரிய விலையை முழுமையாக வழங்காமல் ஏமாற்றுகின்றன. உற்பத்தி செலவும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. உரம், இடு பொருட்கள் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கனமழை அல்லது கடும் வறட்சியால் ஏற்படும் இயற்கை சேதங்களும் அதிகம். அதனால், கரும்பு சாகுபடி பரப்பு கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில், 24 தனியார் சர்க்கரை ஆலைகள், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டியை தொகையை உரிய காலத்தில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில், அருணாச்சலா சர்க்கரை ஆலை செயலிழந்து மூடப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு அந்த ஆலை வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத்தொகை 20 ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த ஆலையும் பொது ஏலத்துக்கு வந்துவிட்டது. ஆனாலும், விவசாயிகளுக்கு விடிவு கிடைக்கவில்லை. மேலும், போளூர் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையும், தனது அரவையை இரண்டு ஆண்டுகளாக நிறுத்தவிட்டது. இந்த ஆலையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.25 கோடி நிலுவைத் தொகையை வழங்காமல் அலைகழிக்கிறது. இதற்காக, விவசாயிகள் நடத்திய போராட்டங்களுக்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, செங்கம் கொழுந்தம்பட்டு தனியார் சர்க்கரை ஆலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வருகின்றனர்.அதனால், வெட்டு உத்தரவு உரிய காலத்தில் கிடைப்பதில்லை. எனவே, கரும்பு எடை இழந்துவிடுவதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், சாகுபடி செலவுக்கு தகுந்தபடி கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நிலுவையின்றி கொள்முதல் தொகை தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதிகபட்சம் ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடப்பு அரவை பருவத்தில் (2022-2023) 10.25 சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ.3,050 என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 10.25 சதவீத பிழிதிறன் கிடைப்பதில்லை, அதனால், டன்னுக்கு ரூ.2,821 விலைதான் வழங்கப்படுகிறது. கரும்பு அரவை பருவம் தொடங்கும் முன்பு, முத்தரப்பு கூட்டம் நடத்தி விலையை அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தாமாகவே கொள்முதல் விலையை அறிவித்துவிடுகிறது. இந்நிலையில், கரும்பு வெட்டுக்கூலி வரலாறு காணாத அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி, நடப்பு கரும்பு அரவை பருவத்தில் கரும்பு வெட்டுக்கூலியாக டன்னுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை வழங்க வேண்டியிருக்கிறது. கரும்பு கொள்முதல் விலையில் சரிபாதியை வெட்டுக்கூலியாகவே கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர்.அவ்வாறு விலை கொடுத்தாலும், வெட்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெட்டுக்கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள். கரும்பு வெட்டுவதற்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பு வெட்டினால், ஒரு டன்னுக்கு ரூ.650 முதல் ரூ.750 வரை மட்டுமே செலவாகும். ஆனால், இயந்திரத்தின் விலை அதிகம் என்பதால் இன்னும் பரவலாகவில்லை. ஆலைகள் மட்டுமே ஒன்றிரண்டு கரும்பும் வெட்டும் இயந்திரங்களை வைத்துள்ளன. அதனை, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ேமலும், இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பு வெட்டுவதற்கு, நடவு பருவத்திலேயே அதிக இடைவெளிவிட்டு கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மகசூல் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே, கரும்பு வெட்டும் இயந்திரங்களை பயன்படுத்துவதிலும் சிக்கல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே, கரும்பு வெட்டுக் கூலியை ஆலைகள் ஏற்க வேண்டும். அல்லது வெட்டுக்கூலியாக குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, கரும்பு எடை கணக்கை கணக்கிட்டு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரும்பு வெட்டுக்கூலி சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு இன்னும் சில ஆண்டுகளில் வெகுவாக சரிந்துவிடும் ஆபத்து உள்ளது. அதனால், விவசாயிகள் மட்டுமின்றி, அதைச் சார்ந்துள்ள சர்க்கரை ஆலைகள், தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.பல வகையிலும் நஷ்டப்படும் விவசாயிகள்தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பலராமன் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளின் பிரச்சனை கவனிக்கப்படாமல் உள்ளது. ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவகாரத்தில் கடந்த ஆட்சியில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, கரும்பு விவசாய சங்கங்களை அழைத்து பேசி, குறைகளை கேட்க முன்வர வேண்டும். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு மூலம் சர்க்கரையாக மட்டுமின்றி, மொலாசஸ், எத்தனால் போன்ற மறைமுக வருமானமும் கிடைக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலையை வழங்குவதில்லை. கொள்முதல் விலையில் பாதியை வெட்டுக்கூலியாகவே வழங்கிவிட்டு, விவசாயிகள் கடனாளியாக வாழ்கின்றனர். கவுரவத்துக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிகம் என்பதுதான் உண்மை. மேலும், லாரி மாமுல் தர வேண்டியிருக்கிறது. அதோடு, பல ஆலைகளில் கரும்பு எடை போடுவதிலும் மோசடி நடக்கிறது. கரும்பு சோகை அதிகமாக இருக்கிறது என்ற காரணம்கூறி, ஒரு லோடுக்கு ஒரு டன் எடையை கழித்துவிடுகின்றனர். பல வகையிலும் நஷ்டப்படும் விவசாயிகள், ஆலைகளை எதிர்த்து பேச முடியாது. வெட்டு உத்தரவு தாமதமானால், கரும்பு எடை குறைந்துவிடும் என அஞ்சுகின்றனர். எனவே, கரும்பு வெட்டுக் கூலியை ஆலைகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். அப்போதுதான், விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும், என்றார்.மேலும் ஒரு சர்க்கரை ஆலை தொடங்க வேண்டும்திருவண்ணாமலை மாவட்டத்தில், நெல், மணிலாவுக்கு அடுத்தபடியாக கரும்புதான் அதிக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இந்த மாவட்டத்தில் செயல்பட்ட இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் செயலிழந்து மூடப்பட்டது. தற்ேபாது, இந்த மாவட்டத்தில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், செங்கம் பகுதியில் ஒரு தனியார் ஆலையும் மட்டுமே உள்ளன. அதனால், இங்குள்ள விவசாயிகள் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம் என வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அல்லது போளூரை மையப்படுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசு தொடங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  அதன்மூலம், கரும்பு சாகுபடி பரப்பு சரிவதை தடுக்க முடியும். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உருவாகும். மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம், நெல் அறுவடை இயந்திரம், உழவு கருவிகள், டிராக்டர் போன்றவை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோல், கரும்பு வெட்டும் இயந்திரங்களையும் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்