கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்ததால் மக்களுக்கு கரும்பு வழங்க கோரி தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து, கரும்பு வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது. இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு டிசம்பர் 22ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குமாறு மனு அளித்தோம். அந்த மனுவை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை