கம்பம் மெட்டு அடிவார பகுதியில் இறந்து கிடந்த மிளா மான்: வனத்துறை விசாரணை

 

கம்பம்/கூடலூர், டிச. 8: கம்பம் மெட்டு அடிவாரப்பகுதியில் சாலையோரம் இறந்து கிடந்த மிளாமானை வனத்துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் கேரளாவை சென்றடையும் கம்பம் மெட்டுரோடு, மேற்கு மலை அடிவார பகுதியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியே செல்கிறது. இதில் பல ஆபத்தான, அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

மேலும், மான், காட்டுப்பன்றி, மயில், செந்நாய் மற்றும் அரியவகை குரங்கு உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. நேற்று காலை கம்பம்மெட்டு அடிவாரப்பகுதியில் சாலையோரம் மிளாமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த மிளாமானின் உடல்பாகங்களை கைபற்றினர்.

பின்னர் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த மிளாமான் 2 வயதுடையதாகும். மிளாமான் வாகனம் மோதி இறந்ததா என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும். இந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகனங்கள் மலைச்சாலையில் மெதுவாக செல்லுமாறு ஓட்டுநர்களை அறிவுறுத்தி உள்ளோம், என்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு