கன்னியாகுமரி கடலில் ராட்சத அலை இழுத்து சென்ற வாலிபர் கதி என்ன? நண்பர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் மது போதையால் நேர்ந்த சோகம்

கன்னியாகுமரி, அக்.6: கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணியை ராட்சத அலை இழுத்து சென்றது. மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது இந்த சம்பவம் நடந்தது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (38). அவரது நண்பர்கள் கோவை மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த ஜானி (37), தமிழ்செல்வன் (40), ஜேம்ஸ் (40), ரமேஷ் (45). இவர்கள் 5 பேரும் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். சுற்றுலா செல்ல திட்டமிட்ட 5 பேரும் கோவையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். இங்குள்ள பல்வேறு சுற்றுலாதலங்களை கண்டுரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தங்களது அறையில் 5 பேரும் சேர்ந்து மதுகுடித்து கும்மாளமிட்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் மாலையில் 5 பேரும் காந்திமண்டபம் மேற்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் ராட்சத அலைகள் எழும் என்பதால் யாரும் குளிக்க முடியாது. இங்கு பாறைகள் அதிகம் என்பதாலும், கடல் அரிப்பை தடுக்க கற்கள் போடப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் யாரும் செல்வதில்லை. ஆனால் நன்றாக குடிபோதையில் இருந்த 5 பேரும் ஆபத்தை உணராமல் இந்த பகுதியில் குளிக்கலாம் என நினைத்துள்ளனர். அனைவரும் கற்களுக்கு இடையே இறங்கிய நிலையில், திடீரென்று எழுந்த ராட்சத அலை 5 பேரையும் இழுத்து சென்றது.

போதையில் இருந்த அவர்களில் 4 பேர் ஒவ்வொருவராக கரைக்கு வந்தனர். அப்போதுதான் தங்களின் நண்பர் சண்முகவேலை ராட்சத அலை இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பதற்றமடைந்த 4 பேரும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கடலில் தேடியும் சண்முகவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு முதல் நேற்று காலையிலும் சண்முகவேலை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. ஆனால் கிடைக்கவில்லை. சுற்றுலா வந்த இடத்தில் தங்களது நண்பரை ராட்சத அலை இழுத்து சென்ற சம்பவத்தால் சக நண்பர்கள் சோகத்தில் உள்ளனர்.

மயிரிழையில்தப்பிய நண்பர்
கடலில் எழுந்த ராட்சத அலை சண்முகவேலை இழுத்து சென்றபோது, அவரது அருகில் நின்ற மற்றொரு நண்பரையும் தூக்கி வீசியது. ஆனால் அவர் சாமர்த்தியமாக பெரிய கல் ஒன்றை பற்றிக்கொண்டதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து