கனமழை எச்சரிக்கை அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் கண்காணிப்பு; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, ஜன. 6: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7ம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related posts

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

169 மாணவர்களுக்கு இலவச சைக்கிகள்