கந்துவட்டி கேட்டு கடையில் இருந்த ரூ.20 லட்சம் பொருட்களை அள்ளி சென்ற அதிமுக பிரமுகர் திருவாரூர் எஸ்பியிடம் கடை உரிமையாளர் புகார்

திருவாரூர்: திருவாரூரில் கந்துவட்டி கேட்டு கடையில் இருந்த ரூ 20 லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடை உரிமையாளர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் தியானபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ராம்ஜி (29) என்பவர் திருவாரூர் வடக்கு வீதியில் சிக்கன் ரெஸ்டாரண்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணன் ஹரிஹரசுதன் என்பவர் திருவாரூர் ஈ .வி .எஸ் நகரில் வசித்து வரும் பூபதி மகன் தினேஷ் என்பவரிடம் வட்டிக்கு ரூ 5 லட்சம் கடன் வாங்கி, பின்னர் அசல் வட்டி உட்பட மொத்தம் ரூ.30 லட்சம் வரையில் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மேற்படி தினேஷ் கூறிவந்த நிலையில் ஹரிஹரசுதன் தற்போது சென்னையில் தலைமறைவாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணன் கொடுக்க வேண்டிய தொகைக்காக சிக்கன் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் ராம்ஜியிடம் ரூ.20 லட்சம் கேட்டு தினேஷ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் பணம் கொடுப்பதற்கு ராம்ஜி மறுத்ததால், ஆத்திரமடைந்த தினேஷ், தனது நண்பரும் அதிமுக பிரமுகருமான திருவாரூர் விளமல் பகுதியில் வசித்து வரும் பிரசாத் (எ) மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பிரசாத் கடந்த 11ம் தேதி இரவு 12 மணி அளவில் தனது அடியாட்களுடன் ராம்ஜி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்ததுடன், வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வடக்கு வீதி கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு கடையை திறக்க வைத்து, அதில் இருந்த ஏசி, எல். இ. டி. டிவி 2 மற்றும் மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், டேபிள் சேர் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். இதையடுத்து தனது கடை பொருட்களை திரும்ப பெறுவதற்காக, ராம்ஜி ரூ.4 லட்சம் உறவினரிடம் கடன் பெற்று கொடுத்த பின்னரும், அந்த தொகையை பெற்றுக் கொண்ட பிரசாத், மேலும் ரூ.20 லட்சம் கொடுத்தால் மட்டுமே கடை பொருட்களை கொடுப்பேன் என்று கூறியதுடன், அதுவரையில் தினந்தோறும் வட்டியாக ரூ.18 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக மேற்படி ராம்ஜி திருவாரூர் எஸ். பி அலுவலகத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி