கந்தர்வகோட்டை, திருமயம், ஆலங்குடியில் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது

கந்தர்வகோட்டை, மே 27: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் காற்றுடன் கன மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி. இப் பகுதியில் கரும்பு, கடலை, நெல், எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தற்சமயம் பெய்யும் மழை பயனுள்ள வகையில் அமையும் என விவசாயிகள் கூறுகிறார்கள். நீண்ட நாட்களாக அக்னி நட்சத்திரத்துடன் வெயில் கடுமையாக இருந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. இதுகுறித்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:- ஆடு, மாடுகள் நீர் குடிப்பதற்கும் எந்த ஒரு குளங்களிலும் நீர் இல்லாமல் வறண்ட நிலை காணப்பட்டது. தற்சமயம் பெய்த மழையில் விவசாயிகள் பயிர் செய்துள்ள சோளம், கடலை, நெல், மரவள்ளிக்கிழங்குக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றும் ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் இறைத்தாலும் மேல் மழைக்கு ஈடாகாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

இப்பகுதியில் கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, காட்டு நாவல், மட்டங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, கல்லாக்கோட்டை, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, ஆகிய கிராமங்களில் பரவலாக மழை பெய்தாதல் விவசாயிகளும் , பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகள் கூறும் போது இந்த மழையின் காரணமாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் உயரும் எனவும் விவசாயங்கள் தட்டுப்பாடு இன்றி செய்ய பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆலங்குடி: இதேபோல் நேற்று மாலை ஆலங்குடி , வம்பன், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கு கொட்டி தீர்த்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசிய நிலையில் பல்வேறு பகுதியில் உள்ள மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமயம்: திருமயம் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென வெயிலுடன் கூடிய மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மேகமூட்டம் வானில் தோன்றி தொடர்ந்து இரவு வரை மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேநேரம் அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் சுட்டெரித்து வந்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்