கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் உர பயன்பாட்டை குறைத்தல் விவசாயிகள் பயிற்சி

கந்தர்வகோட்டை , ஜூலை 4:கந்தர்வகோட்டை வட்டாரம் தச்சங்குறிச்சியில் உர பயன்பாட்டை குறைத்தல் குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டத்தின்கீழ் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் உர பயன்பாட்டை குறைத்தல் பற்றிய விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) .செல்வி, வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அன்பரசன், குடுமியான்மலை மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சந்தானம், துணை வேளாண்மை அலுவலர் வெற்றிச் செல்வம், உதவி விதை அலுவலர் நல்லதம்பி, உதவி வேளாண்மை அலுவலர் ரெகுநாதன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா மற்றும் சுப்பிரமணியன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் திருமேனி மற்றும் சாமியப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அன்பரசன் பேசுகையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் உர பயன்பாட்டை குறைத்தல் பற்றி பேசினார்.

வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செல்வி பேசுகையில், பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு மற்றும் கொளுஞ்சி ஆகியவைகளின் பயன்பாடு பற்றியும் நெற்பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் ஜிங்க் சல்பேட் பற்றாக்குறையினை போக்குவது பற்றியும், நுண்ணூட்டங்கள் இடுவது பற்றியும், மீன் அமிலம், பஞ்சகாவ்யா மற்றும் பூச்சிவிரட்டி தயாரித்தல் பற்றியும் எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் சந்தானம் பேசுகையில் மண் மாதிரி எப்படி எடுப்பது பற்றியும், அதனை பரிசோதனை செய்வது பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் சமச்சீர் உரமிடல், நுண்ணூட்டம் இடுதல் பற்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் ரெகுநாதன் பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் திட்டத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் தரிசு நில தொகுப்பு மூலம் பாசன வசதி அமைத்தல் பற்றி எடுத்துக் கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர் வெற்றிச்செல்வம் அவர்கள் பேசுகையில், வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், பி.எம்.கிசான் திட்டம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். இப்பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரெகுநாதன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் .ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் .சங்கீதா மற்றும் .சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை