கந்தசாமி கோயில் நிலங்கள் யாருக்கு சொந்தம்: ஆவணங்களை சமர்ப்பிக்க வருவாய்த்துறை உத்தரவு

திருப்போரூர், ஜன.3: கந்தசுவாமி கோயில் நிலங்கள் யாருக்கு சொந்தம் என்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் கந்தசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் 1ம் எண் பட்டாவில் வருவாய்த்துறை ஆவணங்களில் தாக்கலாகி உள்ளது. ஆனால், பல தலைமுறைகளாக இந்த நிலங்களில் விவசாயம் செய்து வரும் திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு கிராம மக்கள், இந்த நிலங்கள் தங்களுக்கு சொந்தமானது என்றும், வருவாய்த்துறை ஆவணங்களில் மட்டும் நில உரிமையாளர்களின் பெயர்களில் பட்டா வழங்கப்படாமல் கோயில் பெயரில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். பல்வேறு தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நிலங்களை தங்களின் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கோயில் பெயரில் வழங்கப்பட்டுள்ள 1ம் எண் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்போரூர் வட்டாட்சியருக்கு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதனடிப்படையில், திருப்போரூர் வட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கந்தசாமி கோயில் பெயரில் 1ம் எண் பட்டாவில் தாக்கலாகி உள்ள நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா வழங்கிட கோரும் மனுவின் மீது விசாரணை நடத்தும் பொருட்டு தனி நபர்கள் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் போன்றவற்றை வரும் 10ம் தேதிக்குள் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்