கத்திரி வெயிலின் தாக்கம் மறைந்து கோடை மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம்: மரங்கள்,விளைநிலங்கள் பசுமையானது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு மற்றும்  வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து போதிய  மழையில்லாமல் போனது. அதிலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்  வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் கிராமங்களில் உள்ள  நீர்நிலைகளில் தண்ணீர் வற்றத் துவங்கியது. விவசாய நிலங்களில் ஈரப்பதம்  குறைந்தது. கோடை மழை முன்னதாகவே பெய்யாதா என்று, விவசாயிகள்  எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் குறிப்பிட்ட மணி நேரம் கோடை மழை சாரலுடன் பெய்தது. சில நாள் சூறாவளி  காற்றுடன் பெய்த மழையால் பல கிராமங்களில் வாழைகள் மற்றும் சாலையோர மரக்கிளைகள் முறிந்தன. இதையடுத்து இந்த மாதம் துவக்கத்திலிருந்தும்  இரவு  நேரத்தில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. சில நாட்களாக  நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை தொடர்ந்து சாரல் மழை நீடித்தது.அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலைபகுதியிலும்  இரவு நேரத்தில் அடிக்கடி கோடை மழை பெய்துள்ளது. டாப்சிலிப்,  பரம்பிக்குளம், ஆழியார் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சுற்றுலா பகுதி  குளுமையாகி,சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார  கிராமங்களில் அவ்வப்போது பெய்யும்  கோடை மழையால், இந்த மாதத்தில் கடந்த 4ம்  தேதி துவங்கிய கத்திரி வெயிலின் தாக்கம் மிகவும் குறைவானது.இந்நிலையில்,  கடந்த வாரம் இரவு நேரங்களில், இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஆனைமலை  சுற்றுவட்டார கிராமங்களிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால்,  கடந்த சில மாதமாக மழையின்றி, ரோட்டோரத்தில் சற்று காய்ந்த நிலையில் இருந்த  மரங்கள், தற்போது பச்சை பசேல் என பசுமையாக  காணப்படுகிறது. அதிலும், கிராமப்புற சாலையோரங்களின் இருபுறமும் உள்ள  மரங்கள் பச்சை பசேல் என இருப்பது, பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஒவ்வொரு  ஆண்டும், அக்னி நச்சத்திரம்  துவங்கும் நேரத்தில் ஓரிரு நாட்களில் வெயிலின்  தாக்கம் உச்சத்தை தொட்டவாறு இருக்கும். ஆனால் இந்த முறை, அவ்வப்போது பெய்து  வரும் கோடை மழையால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த சில   நாட்களாக வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல், ஊட்டியை போன்று குளு,குளுவென  இருப்பதை கண்டு, வெளியூர்களிலிருந்து வருவோர் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். இதே  நிலை தொடர்ந்தால், தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளி  நாடுகளிலிருந்தும், பொள்ளாச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக  இருக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என, இயற்கை ஆர்வலர்கள்  கருத்து தெரிவித்தனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை