கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

திருச்சி, ஜூன் 29: திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த ரவுடி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் இருக்கும் டூவீலர் நிறுத்தத்தில் வேலை செய்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை வழிப்பறி செய்ததாக கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டதாக பாலக்கரை குருவிக்காரத்தெருவை சேர்ந்த ரவுடி மணிகண்டன்(25) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் மணிகண்டன் குறித்து நடத்திய தொடர் விசாரணையில், அவர் மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்குகளும், கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக 2 வழக்குகளும் என மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை பரிசீலனை செய்த கமிஷனர் காமினி மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மணிகண்டனிடம் சார்வு செய்தனர். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று ஆயுதங்களை காண்பித்து மிரட்டி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு