கதை கேளு…கதை கேளு…

நன்றி குங்குமம் தோழி பாட்டி கதை சொன்னாதான் சாப்பிடுவேன்…  தூங்குவேன்னு குழந்தைகள் அடம் பிடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் காலப்போக்கில் இவைகளை மறந்த குழந்தைகள் கேஜெட்டுகளுக்கு பழகிவிட்டனர். ஐ.பேட் அல்லது செல்போனில் ஏதாவது ஒரு வீடியோவினை பார்த்து ரசிப்பது தான் இன்றைய குழந்தைகளின் விருப்பமாக உள்ளது. அவர்களும் அதற்கு பழகிவிட்டார்கள். இதனால் கதை கேட்பது மட்டுமில்லாமல் புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் மறந்துவிட்டார்கள்.அதை பாட்காஸ்டிங் மூலம் மீட்டுக் கொண்டு வந்துள்ளது ‘ஸ்டோரி டெல்’ நிறுவனம். ஸ்வீடனில் பத்து வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட நிறுவனம் இந்தியாவிற்கு நான்காண்டு முன் அறிமுகமானது. ‘‘நமக்கு இது புதுசல்ல. முன்பு வானொலியில் சினிமாவினை ஒலிச்சித்திரமாக கேட்டு பழக்கப்பட்டது தான். சினிமாவிற்கு பதில் நாங்க கதையினை ஒலி வடிவத்தில் கொடுக்கிறோம். காதல், திரில்லர், பக்தி, திகில், சாகசம், வரலாறு, நாடகம்… என பலதரப்பட்ட துறை சார்ந்த கதைகள் மற்றும் டாக்குமென்டரிகள் உள்ளன. உங்களுக்கு பிடிச்ச துறையினை தேர்வு செய்து கேட்கலாம்’’ என்கிறார் ஸ்டோரிடெல் இந்திய நிறுவனத்தின் நிர்வாகி யோகேஷ் தர்ஷத். பாட்காஸ்டிங்… குரல் மட்டுமே ஒலிக்கும். வீடியோ… பின்னணி இசை இருக்காது. அப்படி இருந்தும்… மக்களை அசாத்திய குரல் வளத்தாலும், உச்சரிப்பாலும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள் கதை சொல்பவர்கள். இந்த துறைக்கு குரல் வளம் மட்டுமில்லாமல், வார்த்தைகளை உச்சரிக்க தெரிந்து இருக்கணும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரலை மாற்றி படிக்கணும். தற்போது வளர்ந்து வரும் பாட்காஸ்டிங் துறையில் டப்பிங் கலைஞர்கள் மட்டுமில்லாமல் நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகை லட்சுமி பிரியா ‘‘கதை படிப்பது என்னைப் பொறுத்தவரை நடிப்பின் மறுபகுதின்னு சொல்வேன். கதை தானே புத்தகத்தை பார்த்து படிச்சிடலாம்ன்னு சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. ஒரு கதையில் பல கதாபாத்திரங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் குரல் மாத்தி பேசணும். கோபம், சந்தோஷம், துக்கம் என எந்த உணர்வினையும் நம்முடைய குரல் கொண்டுதான் வெளிப்படுத்தணும். காதால் கதைக் கேட்கும் போது, நாம் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு வேலைப் பார்த்துக் கொண்டே கதைக் கேட்கலாம். அதே சமயம் அவர்களை கதைக்குள் அழைத்து செல்வதில்தான் நம்ம திறமை அடங்கி இருக்கு. அதற்கு குரல் வளம் தான் ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரலை மாற்றிப் பேசுவது மட்டுமில்லாமல் ஏற்றத்தாழ்வுடன் சேர்த்து பேசவேண்டும். அப்பதான் எழுத்தாளர் கதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று உணர்வுபூர்வமாக நமக்கு புரியும். ஒரு நடிகையா எனக்கு இது பிடிச்சிருக்கு. கலைத் துறையைப் பொறுத்தவரை பலதரப்பட்ட வேலை செய்யும் போது இது நம்முடைய திறமைக்கு மேலும் தீனி போடுவது போல் தான். கதைப் படிக்கும் போது அது நடிப்பிற்கும் ஒரு பயிற்சியாக அமையும். சினிமாவில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு மட்டும் தான் நடிப்போம். அதற்கு மட்டும் தான் குரல் கொடுப்போம். ஆனால் கதை படிக்கும் போது பல கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுப்போம். எல்லாவற்றையும் விட ஒரு கதாப்பாத்திரத்திற்கு நாம் குரல் கொடுத்தால் அதே குரல் மற்றும் அந்த குரலுக்கான ஏற்றத்தாழ்வினை கதை முழுக்க கடைப்பிடிக்கணும். பொதுவாகவே ஒரு நாளைக்கு 100 பக்கங்கள் தான் படிக்க முடியும்.ரொம்ப நேரம் படிச்சா தொண்டை வலிக்கும். நடிகைக்கு எப்படி உடல் கட்டுக்கோப்பா இருக்கணுமோ அதேப் போல் கதை படிப்பவர்கள் தங்களின் குரல்களை ரொம்பவே பத்திரமா பார்த்துக்கணும்’’ என்றவர் நடிகையாக இருந்தாலும் கதை படிக்க ஆர்வம் காட்டியது குறித்து விவரித்தார். ‘‘நடிகையா 365 நாளும் பிசியா இருப்போம்ன்னு சொல்ல முடியாது.ஷூட் இருக்கும் போது தான் நமக்கு வேலையே இருக்கும். மற்ற நாட்களில் சும்மா தான் இருப்போம். அந்த நாட்களை ஏன் எனக்கு பிடிச்சதை செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. எனக்கு தமிழ் புத்தகங்கள் படிக்க பிடிக்கும். ஸ்டோரிடெல் நிறுவனம் கதைப் படிக்க ஆட்களை தேடிக் கொண்டு இருப்பதை கேள்விப்பட்டேன். ஆடிஷனுக்கு செய்தாங்க. செலக்ட் ஆனேன். நிறுவனம் தேர்வு செய்வதை விட எழுத்தாளர்கள் நம்மை தேர்வு செய்யணும் அது தான் இதில் சாலஞ்சே. ஒரு எழுத்தாளரின் கதையை நான் தான் படிப்பேன்னு படிக்க முடியாது. அந்த கதையை பலர் படித்து குரலை பதிவு செய்து எழுத்தாளருக்கு அனுப்புவோம். அவருக்கு எந்த குரல் பிடிக்கிறதோ அவர் தான் புத்தகத்தை படிப்பார். இப்போ ஆடியோ புத்தகங்கள் நல்ல பிக்கப்பாகி இருக்கு. காரணம் சிலருக்கு தமிழ் பேச தெரியும், ஆனால் படிக்க தெரியாது. பலர் பொன்னியின் செல்வன் கதையை ஆங்கிலத்தில் தான் படிக்கிறாங்க. அவங்க இதை ரொம்பவே ரசிச்சு கேட்கிறாங்க. குறிப்பா ஊருக்கு போகும் போது அல்லது டிரைவ் செய்யும் போது கேட்டுக் கொண்டே ேபாகலாம். கையில் புத்தகமா எடுத்து படிப்பதும் ஒரு வித உணர்வு தான். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை. அவர்களுக்கு ஸ்டோரிடெல் ஒரு வரப்பிரசாதம்’’ என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நடிகை லட்சுமி பிரியா.கீர்த்தனா, டப்பிங் கலைஞர்‘‘பத்து வருஷம் முன்னாடி தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளரா என் பயணம் ஆரம்பிச்சது. அடுத்து ஆன்லைன் போர்ட்டலில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். இதற்கிடையில் கல்யாணம், குழந்தை என்பதால் என்னால் கைக்குழந்தையை விட்டுவிட்டு வெளியே போக முடியவில்லை. அந்த சமயத்தில் தான் நண்பர்கள் எல்லாரும் குரல் வளம் நல்லா இருக்கு ஏன் டப்பிங் செய்யக்கூடாதுன்னு கேட்டாங்க. ஆறு வருஷமா டப்பிங் செய்றேன். பி.பி.சி, டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்ற சேனல்களுக்கு நான் குரல் கொடுக்க ஆரம்பிச்சேன். சினிமா மட்டுமில்லாமல், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்து வந்தேன். ஆறு வருஷமா எந்த தடங்கள் இல்லாமல் போய்க் கொண்டு  இருந்தது. கடந்த வருடம் கோவிட் தொற்று காரணமாக சினிமா மற்றும் அனைத்து கலை சார்ந்த துறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டது. அதன் தாக்கம் டப்பிங் துறையிலும் வெளிப்பட்டது. ஏற்கனவே முடித்த படங்களுக்கு தான் டப்பிங் செய்தோம். தொலைக்காட்சி சீரியலிலும் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாங்க. முக்கியமான கதாப்பாத்திரங்கள் மட்டுமே வைத்து ஷூட் செய்தாங்க. முக்கிய கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க மட்டும் தான் வாய்ப்பு இருந்தது. அது மட்டுமில்லை அந்த நேரத்தில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் கூட கிடையாது. அதை மட்டுமே நம்பி இருக்கும் பல டப்பிங் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்த சமயத்தில் தான் ஸ்டோரிடெல் பற்றி கேள்விப்பட்டேன். இதுவும் ஒரு வகையான டப்பிங் தான். நமக்கு வசதியான நாளை தேர்வு செய்யலாம். தினமும் 100 பக்கங்கள் வரை படிக்கலாம். முழு புத்தகம் படித்த பிறகு திருத்தம் செய்யப்பட்டு அந்த ஆப்பில் அப்லோட் செய்வாங்க’’ என்றவர் ஆடியோ புத்தகத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். ‘‘இந்த காலத்தில் வயது வித்தியாசமில்லாமல் எல்லாருமே  சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்காங்க. உலகில் எங்கு ஒரு விஷயம் நடந்தாலும் உடனடியாக அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்றாங்க. எப்போதும் செல்போனில் எதையாவது பார்த்துக் கொண்டு இருக்கும் இன்றைய தலைமுறையினரை வெறும் கதை சொல்லி ஈர்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ் பேச தெரியாத, படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஆடியோ புத்தகங்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். அதே சமயம் கதை படிப்பது தானேன்னு எளிதா சொல்லிட முடியாது. 300 பக்க கதையை நாம் புத்தகமாக படிக்கும் போது அதிக பட்சம் ஒரு மணி நேரமாகலாம். அதையே வாய்விட்டு படிச்சா மூணு மணி நேரமாகும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் குரலில் வித்தியாசம் காண்பிக்கணும். எனக்கு சின்ன வயசில் இருந்தே கதைப் படிக்க பிடிக்கும். ரசிகையா நான் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை படிச்சிருக்கேன். இப்போது அவர்களின் புத்தகங்களுக்கு குரல் கொடுக்கிறேன்னு நினைக்கும் போது ெராம்பவே நெகிழ்ச்சியா இருக்கு. ஏற்கனவே படிச்ச கதைகள் என்றாலும், குரல் கொடுப்பதற்கு முன் ஒரு முறை படிச்சு பிராக்டிஸ் செய்வேன். அப்பதான் கதாபாத்திரத்தின் உணர்வினை அப்படியே கொடுக்க முடியும். ராகமா படிச்சா தூக்கம் வந்திடும். நம்முடைய குரலால் மட்டுமே கதையை வண்ணமயமாக்க முடியும். ஒரு நரேட்டரா எனக்கு அதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கு. டப்பிங் போல தான்னு நானும் முதலில் நினைச்சேன். ஆனால் கதைப் படிக்கும் போது தான் அதில் எவ்வளவு வேலை இருக்குன்னு புரிஞ்சது. சண்டை போடுகிற காட்சி வந்தா குரலை உயர்த்தணும். அழும் போது விசும்புற மாதிரி படிக்கணும். வரலாறு புத்தகங்கள் படிக்கும் போது, அதில் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் எல்லாம் அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப இருக்கும். சில சமயம் திருநெல்வேலி பகுதியில் கதை நகர்ந்தால், அந்த வட்டார மொழியில் படிக்கணும். ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும் போது ரொம்பவே கவனமா இருக்கணும். எல்லாவற்றையும் விட வாய்விட்டு படிக்கும் போது, நுரையீரல் ரொம்பவே டயர்டாயிடும். இதெல்லாம் படிக்க ஆரம்பிச்ச பிறகு தான் புரிஞ்சது’’ என்றவர் பாட்காஸ்டிங்கிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறினார். ‘‘என் மகனுக்கு பத்து வயசாகுது. கதை கேட்பான், அதையே புத்தகமா படிக்கமாட்டான். இவனைப் போல் பலர் இருக்காங்க. இதில் மற்றொரு வகையினரும் உண்டு. கதையைக் கேட்டு அந்த புத்தகத்தை தேடிப் போய் படிக்கிறாங்க. இப்ப குழந்தைகளுக்கான புத்தகங்களும் பாட்காஸ்டிங்கில் வந்திடுச்சு. குழந்தைகள் அனைவரும் டெக்னாலஜிக்கு பழகி இருப்பதால், கதைகளை ஆர்வமாக கேட்பாங்க. இதனால் அவர்களின் கற்பனை மற்றும் சிந்தனை திறன் அதிகரிக்கும். இப்ப குழந்தைகளுக்கு கதை சொல்ல யாரும் இல்லை. அவர்களுக்கு பாட்காஸ்டிங் மூலம் கதை சொல்கிறோம்’’ என்றார் கீர்த்தனா.தொகுப்பு: ஷம்ரிதி

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!