கண்ணங்குடி விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

தேவகோட்டை, ஜூலை 4: தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு பசுந்தாள் உரவிதை வழங்கப்பட்டது. கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவணன் மெய்யப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மத்திய திட்ட ஆலோசகர் கண்ணன், கண்ணங்குடி வட்டாரத்தில் கோடை உழவு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 1 ஏக்கருக்கு தேவையான 20 கிலோ தக்கைப்பூண்டு விதை மானியத்தில் வழங்கப்படுவது குறித்து விளக்கி கூறினார். மேலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடர்பான கருத்துக்கள்,பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுவதால் மண் வளம் காக்கப்படுகிறது எனவும் உரச்செலவு பெருமளவு குறைவதாகவும் கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) காளிமுத்து மானிய விலையில் மண்புழு உரப்படுக்கைகள், வேப்பங்கன்றுகள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருத்துவ குணம் கொண்ட ஆடாதொடா,நொச்சி கன்றுகள் விநியோகம்,கோடை உழவு மானாவாரி சாகுபடி குறித்து விளக்கினார். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரேமலதா,நவநீதகிருஷ்ணன், அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா,உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை