‘கண்ணகி கோயில் கேரளாவுக்கு சொந்தம்’ அதிமுக எம்.பி சர்ச்சை பேச்சால் தென்மாவட்ட மக்கள் கொதிப்பு

தேனி: நாடாளுமன்றத்தில் கண்ணகி கோயில் கேரளாவிற்கு சொந்தமானது என அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசிய பேச்சால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத், நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, ‘‘கேரள எல்லைக்குள் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயிலை ஒன்றிய அரசு பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னமாக அறிவித்து ஒன்றிய அரசின் பிரசாத் திட்டத்தில் சேர்த்து நிதி ஒதுக்கி, வருடத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும்’’ என பேசினார். கண்ணகி கோயில் உள்ள இடம் தமிழகத்திற்கு சொந்தமானது. இந்த சூழலில் கண்ணகி கோயில், கேரள எல்லைக்குள் இருப்பதாக ரவீந்திரநாத் எம்.பி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ரவீந்திரநாத் எம்பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 33 மீட்டருக்கு உட்புறம் தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கிறது என்பது இந்திய சர்வே துறையால் ஒரு முறைக்கு பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலம் முதல் தமிழகத்திற்கு சொந்தமான நிலத்தில் கோயில் இருப்பதாக தெளிவாக இருக்கிறது. முழுக்க, முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கேரள அரசுக்கும், கண்ணகி கோயிலுக்கும் எவ்வித தொடர்பு இப்போதும், எப்போதும் இல்லை. கண்ணகி கோயில் என்பது வழிபாட்டு உரிமை மட்டுமல்ல. தமிழக உரிமையும் என்பதால் ஒருமித்த கருத்தில் அனைவரும் நிற்க வேண்டும். இவ்வாறு எழுதியுள்ளார். தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் ரவீந்திரநாத் பேச்சுக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு