கண்டாச்சிபுரம் அருகே பரபரப்பு அங்காளம்மன் கோயில் மூலவர் சிலை உடைப்பு

 

கண்டாச்சிபுரம், ஜன. 26: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பழமையான அங்காளம்மன் கோயில் கருவறை மூலவர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராம எல்லையில் 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரத்து அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருடந்தோறும் மயானகொள்ளை திருவிழா நடத்தியும் தினந்தோறும் விளக்கேற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கோயில் பூசாரி கோயிலில் பூஜை செய்து முடித்துவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை கோயிலுக்கு அக்கம்பக்கத்து நிலத்து விவசாயிகள் கோயில் கருவறையில் உள்ள மூலவர் அங்காளம்மன் சிலை இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து கிராம பொதுமக்கள் மற்றும் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோயிலின் முன்பு குவிந்தனர். இதனால் போலீசாரும் குவிக்கப்பட்டு சிலையை உடைத்தவர்களை விரைந்து கண்டுபிடிப்போம் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து கோயில் கருவறையில் இருந்த சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்