கண்டக்டர் பலியான சம்பவம் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி

திருவண்ணாமலை: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த அரசு பஸ் கோர்ட் உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது. செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(40). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா, மாரண்டஹல்லி கிராமத்தில் மனைவி தீபா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். மேலும், வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையும் வைத்திருந்தார். அந்த கடையை, அவரது மனைவி பராமரித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 29.8.2010 அன்று தன்னுடைய பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, பாலக்கோட்டில் இருந்து அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது, பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும்போது அதிக வேகத்தில் திடீரென பஸ்சை டிரைவர் இயக்கியதால், பஸ் படியில் நின்றிருந்த சிவக்குமார், நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.தலையில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக, திருவண்ணாமலையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், சிவக்குமாரின் மனைவி தீபா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தினால் பலியான சிவக்குமாரின் குடும்பத்துக்கு ₹19.92 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு (சேலம் கோட்டம்) கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது.ஆனால், இழப்பீடு தொகையை வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் அலைகழித்தது. எனவே, இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என மீண்டும் ேகார்ட்டில் தீபா மேல்முறையீடு செய்தார். எனவே, அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த மாதம் 1ம் தேதி திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்துகளுக்கான சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை நேற்று கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்து கோர்ட்டுக்கு பஸ்சை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு