கணவன், மனைவி இருவருக்கும் இடையில் உள்ள ஈகோ என்ற செருப்பை வீட்டிற்குள் நுழையும்போது வாசலிலேயே விட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: கணவன்-மனைவி இருவரும் வீட்டுக்குள் நுழையும்போது ஈகோ மற்றும் சகிப்பு தன்மையின்மையை செருப்பாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிகுமார். இவருக்கும் இவரது மனைவி இந்துமதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் சசிகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு விவாகரத்து கிடைத்தது. இந்நிலையில், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக மனைவி இந்துமதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் எனக்கு எதிராக குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் எனது மனைவி (முன்னாள்) வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை 15 நாட்களில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். மனைவிதான் தன்னை கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் சசிகுமாருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு பணி செய்யாமல் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். திருமணம் என்பது ஒப்பந்தமல்ல. அது ஒரு அருட்சாதனம் என்று தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலில் அணியும் செருப்பாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவர் என்றும் அறிவுரை கூறியுள்ளார்….

Related posts

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்

தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம்

போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு