கணவனை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி கைது

 

கல்வராயன்மலை, நவ. 11: கல்வராயன்மலையில் கணவனை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யாதுரை மல்லிகா தம்பதியினர். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மணியார்ப்பாளையம் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மல்லிகாவுக்கும் கணவர் அய்யாதுரைக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையின் காரணமாக கணவனையே மனைவி அடித்து கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவத்தில் மல்லிகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து வழக்கு கள்ளக்குறிச்சி அமர்வுநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்ததில் ஜாமீனில் வெளிவந்த மல்லிகா கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அமர்வுநீதிமன்றம் மல்லிகாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்திருந்த நிலையில் ஒரு வருடமாக கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் பல பகுதிகளில் தேடிவந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை கிராமத்தில் மல்லிகா தலைமறைவாக இருந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று மல்லிகாவை எஸ்ஐ குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். கணவனை கொலை செய்து ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து போலீசாரை ஏமாற்றி வந்த மல்லிகாவை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்