கட்சி பதவிக்காக தாமரை மூன்றாக உடைந்த ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரன்சி புகுந்து விளையாடும் கதையை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்துல தாமரை கட்சியின் வளர்ச்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல் உள்ளது. இம்மாவட்டத்தில், கட்சிக்காக உழைத்த பிரபலங்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தற்போது புதிதாக ஒரு மாவட்ட தலைவரை கட்சியின் மேலிடம் நியமித்திருக்கிறது. இவருக்கு, கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லையாம். ஏற்கனவே இரு பிரிவாக குரூப் பாலிடிக்ஸ் நிலவும் நிலையில், இவரை புதிதாக உள்ளே கொண்டுவந்து திணித்த காரணத்தால், மூன்றாவதாக ஒரு குரூப் உதயமாகி விட்டது. இக்கட்சிக்கு, இம்மாவட்டத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் இருக்கிறார். அதனால், அவரை மையமாக வைத்து சிலர், தங்களது பதவியை தக்கவைக்கவும், வருவாய் பெருக்கவும் சுற்றி, சுற்றி வருகின்றனர். மாநகரைப்போலவே, புறநகரிலும் இதே கூத்துதான் நடக்கிறது. அதாவது, மேட்டுப்பாளையம் நகர தாமரை தலைவரை நியமிப்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இந்த பதவியை பிடிக்க, பலரும், பல விதமாக முட்டி மோதுறாங்க. இளைஞரை தேர்வுசெய்து நியமிச்சா, கட்சியில் எழுச்சி ஏற்படும் என மேலிடம் விரும்புகிறதாம். ஆனால் தலைமை நினைப்புக்கு மாறாக கட்சி மூன்று பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக வார்த்தைகளால் அர்ச்சித்து கொள்கிறார்களாம். அதனால், கட்சிக்கு முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் எல்லாம் பதவி கேட்டு, வரிசை கட்டுறாங்களாம். ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் இந்த கட்சியில், பதவியை பிடிக்க, கரன்சி கண்ணாபின்னாவென்று விளையாடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பிரச்னையை தீர்க்காம கார்ல எஸ்கேப் ஆன தலைவரை பற்றி சொல்லுங்க…’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘சமீபத்தில் தாமரைக் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கடற்கரை மாவட்டத்தில் உள்ள புனித தலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் பெயரை முன்னதாகக் கொண்டவர் மாவட்ட தலைவராக இருந்தார். சமீபத்தில் இவர் மாற்றப்பட்டு, ‘சூரியன்’ பெயருடையவர் நியமிக்கப்பட்டார். இவர் நியமனமான கையோடு, தனக்கு வேண்டியவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளை வழங்கினாராம். இதனால் பழைய மாவட்டத்திற்கும், புதிய மாவட்டத்திற்கும் தனித்தனி கோஷ்டி உருவாகி இருக்கிறது. கடற்கரை மாவட்டத்திற்கு வந்த கட்சி தலைமையானவரை வரவேற்பதில் இரு பிரிவாக செயல்பட்டிருக்கின்றனர். மாவட்ட எல்லையில் இரு கோஷ்டியினர் தனித்தனியாக பேனர்கள் வைத்தும், கொடிகள் கட்டியும் வைத்ததுடன், ஒருவரை ஒருவர் முண்டியடித்தும், திட்டிக் கொண்டும், தலைவரானவர் முன்னிலையிலேயே மல்லுக்கட்டு நடத்தி இருக்கின்றனர். இதை பார்த்தும் பிரச்னையை தீர்த்து வைக்காமல் தாமரை தலைவர் காரில் எஸ்கேப் ஆகிபோனதை பார்த்த கட்சியின் இருதரப்புமே கடுப்பில் இருக்கிறதாம்…’’’’ என்றார் விக்கியானந்தா.‘‘ டம்மியான சின்ன மம்மி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ நெற்களஞ்சியம் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்ன மம்மி கலந்து கொண்டார். வழக்கமாக, சின்ன மம்மி டெல்டா மாவட்டங்களில் விசிட் அடித்தால், குக்கர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வரவேற்பது வழக்கமாக இருந்து வந்ததாம். ஆனால் தற்போது சின்ன மம்மிக்கும், குக்கர் கட்சி தலைமைக்கும் இடையே உரசல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் விசிட் வரக்கூடிய சின்ன மம்மியை யாரும் வரவேற்க கூடாது என குக்கர் கட்சியினருக்கு தலைமையிடத்தில் இருந்து அதிரடியாக வாய்மொழி உத்தரவாம். இதனால் டெல்டா மாவட்ட குக்கர் கட்சியினர் சின்ன மம்மியை வரவேற்க வராமல் சமீப காலமாக புறக்கணித்து வருகிறார்களாம். நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் வந்த சின்ன மம்மியை, குக்கர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தொண்டர்கள் கூட வரவேற்க செல்லவில்லையாம். தகவல் தெரிந்த சின்ன மம்மி கடும் அப்செட்டில் சென்றதாக நெற்களஞ்சிய மாவட்ட குக்கர் கட்சி தொண்டர்களுக்குள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரைட்… ரைட்… ரைட்டரால் தப்பும் பெருச்சாளிகள் யாரு… ரைட்டர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர்  சிட்டியில கடந்த சில நாளுக்கு முன்னாடி போதையில பைக் ஓட்டிய வாலிபர்  ஒருத்தர். சத்தான ஏரியாவுல எதிர்த்திசையில வந்த காக்கியோட பைக்மேல  மோதிட்டாராம். அதுல அந்த காக்கிக்கு அடிபட்டிருக்குது. பைக்கும்  சேதமாகிடுச்சாம். பப்ளிக் ஒருத்தருக்கும் காயமாம். ஆனா போதை ஆசாமி மேல எந்த  கேசும் போடலையாம். போதை ஆசாமியோட சொந்தகாரு, வெயிலூர் மாவட்ட தலைமை காக்கி  அலுவலகத்துல டிஸ்ட்ரிக்கோட குற்ற ஆவண காப்பகத்துல ரைட்டராக இருக்காராம்.  இவர் சிபாரிசு செஞ்சதனாலத்தான், காக்கி மேல மோதியிருந்தாலும் கேஸ் போடாம  விட்டுட்டாங்களாம். சேதமான ைபக்கை சரிசெஞ்சி தர்றோம்னு சமாதானம்  செஞ்சிருக்காங்களாம். இதுதான் இப்படின்னா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி  வெயிலூர் வடக்கு காவல்நிலையத்துலயும், வழிப்பறி வழக்குல ஒரு கார்  சிக்குச்சாம். அந்த காரையும் இந்த ரைட்டர் தான் சிபாரிசு செஞ்சி  விடுவிச்சாராம். இப்படி தப்புக்கு துணைபோறராம், அந்த ரைட்டர். அந்த 4  எழுத்து பிரிவுல 3 ஸ்டார் காக்கி இல்லாததால, இவர் தான் 3 ஸ்டார் காக்கி போல  செயல்பட்டு வர்றாராம். பல வருஷமா அந்த பிரிவுலயே இருக்காராம். கிரைம் ரேட்  போடுறதும் இவர் டிபார்ட்மென்ட்டாம். அதனால அனைத்து ஸ்டேஷன் காக்கிகளும்  இவர் கண்ட்ரோல்ல இருக்காங்களாம். மாவட்ட உயர் காக்கி தான் தலையிட்டு  தப்புக்கு துணைபோற காக்கி மேல நடவடிக்கை எடுக்கணும்னு காக்கிகளே  புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

ஒரு மாதத்தில் இலை கட்சியில் மாற்றம் வரும் என நிர்வாகிகளுக்கு வைத்தி ‘டானிக்’ கொடுத்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

நிக்காம போன ரயிலு… இதுதான் ஒன்றியத்தின் லட்சணம் என்கிறார்: wiki யானந்தா