கட்சியில் இருக்க பணம் தா.. இல்லை சுகம் தா என மிரட்டல் பாஜ மாவட்ட தலைவர் மீது திருநங்கை பாலியல் புகார்: சென்னை போலீசில் அளித்தார்

சென்னை: பாஜ மாவட்ட தலைவர் மீது அதே கட்சியை சேர்ந்த திருநங்கை பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பிரிக்கிளின் சாலை பகுதியை சேர்ந்தவர் ரதி (எ) ராஜா(40). திருநங்கையான இவர் பாஜ கட்சியில் 20 வருடங்களாக உள்ளார். கலை மற்றும் கலாசார பிரிவு தலைவராக உள்ளார். மேலும் நடந்து முடிந்த மாமன்ற தேர்தலில் திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 76வது வார்டில் பாஜ சார்பாக நின்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், `சென்னை மேற்கு மாவட்ட பாஜ தலைவராக உள்ள கபிலன் என்பவர் கட்சி மூலமாக எனக்கு அறிமுகமானார். பின்னர் அவரது பிஏ கடந்த சில நாட்களுக்கு முன்பு கபிலன் அழைக்கிறார் என்று கூறி எனக்கு போன் செய்தார். அதன் பிறகு நான் அங்கு சென்றதும் என்னிடம் அசிங்கமாக பேசி மேலே கையை வைத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு எனது வீட்டிற்கு அடிக்கடி ஆட்கள் வந்து என்னை மிரட்டி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து நான் எனது கட்சி தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். அங்கு அவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் அங்கு வரவில்லை. அதற்கு பதில் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். மேலும் கட்சியில் எனக்கு பதவி வேண்டும் என்றால் ரூ50 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டுகிறார். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பாஜ மாவட்ட தலைவர் கபிலன் தான் காரணம்’ என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, `கடைசியாக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது மாவட்ட தலைவர் கபிலன் 50க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வர சொன்னார். அதற்கு பணம் தருவதாக கூறினார். அதன் பின்பு பணம் தராமல் ஏமாற்றி விட்டார். அதனால் நான் வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்துள்ளேன். கட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் ஒன்று பணம் தர வேண்டும் அல்லது சுகம் தர வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது புகார் குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை விசாரணை செய்து கபிலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து தலைமைச் செயலக காலணி குடியிருப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜ மாவட்ட தலைவர் மீது அதே கட்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் பாலியல் புகார் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு கட்சி பதவிகளை போடுவது குறித்து புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு