கட்சிக்காரர்கள் கொடுத்த பதிலடியால் கலங்கிப்போய் மவுனமான தெர்மாகோலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திருமண மண்டபத்தை மீட்க தனிப்பிரிவுக்கு புகார் மனு சென்றதால் கரன்சி பார்த்து வந்த இலை கட்சி நிர்வாகி கிலியில் உள்ளாராமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘சிமெண்ட் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டராதித்தம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கருப்புசாமி கோயில் வளாகத்தில் பஞ்சாயத்து  மற்றும் அறநிலையத்துறை அனுமதி பெறாமல் ரூ.40 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டு கடந்த இலை ஆட்சியில் திறக்கப்பட்டது. இந்த திருமண மண்டபத்திற்கு சொந்த கொண்டாடி வரும் இலைகட்சி மாவட்ட நிர்வாகி ஒருவர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இந்த மண்டபத்தை வாடகைக்கு விட்டு வசூல் பார்த்து வருகிறாராம். இந்த திருமண மண்டபம் கட்டுவதற்காக முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வசூலும் செய்யப்பட்டதாம். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்துக்கு அப்போது அதிகாரிகள்  எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம்.தற்போது ஆட்சி மாறிய பின்பும் இலைகட்சி நிர்வாகி சொந்தம் கொண்டாடி வருவதால் இந்த மண்டபத்தை மீட்க திமுக நிர்வாகிகள் ஒரு பக்கமும்.. அறநிலையத்துறையிடம் ஒப்புடைக்கும்படி கண்டராதித்தம் ஊராட்சி சார்பில் ஒரு பக்கமும்… களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால்… இலைகட்சி நிர்வாகி இந்த மண்டபம் தனக்கு சொந்தமானது என கூறி வருகிறாராம்.. இதனால் இந்த மண்டபத்தை மீட்கும்படி அறநிலையத்துறை அமைச்சர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஊராட்சி சார்பிலும், ஊர் முக்கியஸ்தவர்கள் சார்பிலும் புகார் மனு சென்றுள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியில் கசிய தொடங்கி இருப்பதால் தன்னிச்சையாக மண்டபத்தில் வசூல் பார்த்து வந்த இலைகட்சி நிர்வாகி கிலியில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘செல்லூர் ராஜூவுக்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்தார்களாமே.. என்ன விஷயம் அது..’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் நகர் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் போட்டியிடுவதற்காக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தொகுதிவாரியாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட பூத் கமிட்டி அமைக்கவில்லை. முறையாக தேர்தல் பணியாற்றாததால், நாம் தோல்வி அடைந்தோம். என நேரடியாக கிளை கழக செயலாளர், பகுதி கழக நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய பகுதி செயலாளர்கள், கட்சி தலைமை நியமித்த எங்களை புறக்கணித்து விட்டு, உங்கள் ஆதரவாளர்களுக்கு கட்சி பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் பதவியை பறித்து கொடுத்தீர்கள். கட்சிக்காக உழைத்த எங்களுக்கு என்ன செய்தீர்கள். தவறு செய்தது நீங்கள், நாங்கள் அல்ல என பதிலடி கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பாராத செல்லூர் ராஜூ ஆடிப்போனார். எதிர்வாதம் செய்வதை தவிர்த்து மவுனமாக இருந்துவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘வெயிலூர் மாவட்டத்தில் பெண் அதிகாரியின் ஆட்டம் ஜாஸ்தியா இருக்குதாமே..’’‘ஆமா.. இங்குள்ள பட்டு என முடியும் ஒன்றியத்துல இருக்குற வட்டார கல்வி அலுவலகத்தில் நடக்குற கூத்தால் ஆசிரியருங்க டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்டலாம்னு புலம்புறாங்களாம். என்ன விஷயம்ன்னு பார்த்தா, அங்க இருக்குற வட்டாரகல்வி அலுவலகத்தில் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலரான பெண் அதிகாரி தொட்டதுக்கெல்லாம் பணம் கறக்குறதுலயே குறியாக இருக்குறாராம். இவரோட பொறுப்புல இருக்குற பள்ளிகள்ல படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் உரிய பள்ளிகளுக்கு சென்று வழங்க வேண்டும். இதற்கான செலவு தொகையை தமிழக பள்ளி கல்வி துறை வழங்குது. இந்த பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ‘பட்டு’ ஊருக்கு வந்து வாங்கி செல்ல வெச்சிருக்குறாரு. அதற்கான  செலவு தொகையும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்காமல் ஆட்டைய போடுறாராம். வெளி மாவட்டத்துல இருந்து வரும் இந்த பெண் அதிகாரி வெயிலூர் தலைமை கல்வி அதிகாரி நடத்தும் கூட்டத்திற்கு கூட வருவதில்லையாம். கோப்புகளில் கையெழுத்து பெற உதவியாளர்களை ஆம்பூர் பஸ் நிலையத்துக்கு வரவெச்சி, ரோட்டுலயே நின்னு கையெழுத்து போட்டு அனுப்புகிறாராம். யாராவது கேட்டால் ஆய்வுக்கு போய் இருக்குறதாக சொல்லச்சொல்லி, உதவியாளர்களுக்கு கட்டளையாம். பள்ளிகளில்  ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் தங்களது குடும்ப நல நிதி, பணிபலன், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன், சம்பள உயர்வு, இதர பலன்கள் பெற ஒவ்வொன்றிற்கும் முக்கிய ஆவணம் இன்றி பேப்பர் நகர்வதில்லையாம். மேலும், வட்டார கல்வி அலுவலகத்தில் 38 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவருக்கு ஓய்வு  நிலையில் அவரது குடும்பநல நிதி ஆகியவற்றிற்கு கையெழுத்து போடாமல் இவர் இழுத்தடித்த விவகாரம் முதன்மை கல்வி அலுவலர் வரை புகாராக சென்றது. புகார் அப்படியே இருக்க இவரது ஆட்டம் நாளூக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுதாம்’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா