கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடியில் ரூ14 கோடியில் தூண்டில் வளைவு: நாளை பணிகள் தொடங்கும்: ஆட்சியர் அறிவிப்பு

காலாப்பட்டு: கோட்டக்குப்பம்அருகே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் 10 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் அங்கு ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர் மோகன், ரூ.14 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும், இதற்கான பணிகள் நாளை தொடங்கும் என அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைக்கு வந்து செல்கிறது. இந்த கடுமையான கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலைகளில் அடித்து சென்றுவிட்டது. 3 க்கும் மேற்பட்ட படகுகளும் கடல் அலைகளில் இழுத்து சென்று விட்டது. தென்னை மரங்களும் கடல் அலைகளில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று 10 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது.  இதனிடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்திற்கு நேற்று மாலை சென்று கடல் அரிப்பை பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு உடனடியாக அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிலையில் மாமல்லபுரம் அருகே புயல்கரையை கடந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தை மீண்டும் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியை பார்வையிட்டார். பின்னர் கோட்டக்குப்பம் இசிஆர் ரவுண்டானா பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். புயல் காரணமாக இசிஆரில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டதை ஆய்வு செய்த ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருமாறு அதிகாரிகள், காவல்துறையினரை கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பிள்ளைச்சாவடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இப்பகுதி மீனவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அங்கு ரூ.14 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். இப்பணிகள் நாளையே தொடங்கப்படும். மீனவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு அதிகாரிகள் கூறும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இசிஆரில் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டிருந்த வாகன போக்குவரத்து இன்று காலை சகஜநிலை திரும்பியதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட மின்சாரமும் 90சதவீதம் வரை தற்போது வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது டிஐஜி பாண்டியன், எஸ்பி நாதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை