கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்ற 23 பேர் கைது

கடலூர், ஜூன் 22: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷசாராயம் அருந்தி 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட 7 உட்கோட்டங்களில் தீவிர சாராய வேட்டை நடத்தி, கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம், 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாராய விற்பனை மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்தல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு