கடலூரில் பரபரப்பு ஆட்சியர் அலுவலகத்தில் பெண், விவசாயி தீக்குளிக்க முயற்சி

கடலூர், நவ. 21: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி மற்றும் பெண் நேற்று தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தின. விசாரணையில் அவர் பண்ருட்டி தாலுகா கண்டரகோட்டையை சேர்ந்த முத்துக்குமரன் மனைவி பரமேஸ்வரி (35) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், தனது கணவரின் முதல் மனைவி இறந்துவிட்டதால், என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எனக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். எனது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரும் உயிரிழந்துவிட்டார். நான் எனது கணவர் வீட்டிலேயே வசித்து வருகிறேன். ஆனால் எனது மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. எனது மகனின் படிப்பு செலவுக்கு கூட பணம் தர மறுக்கிறார்கள். அடிக்கடி என்னை சித்ரவதை செய்து வருகின்றனர். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோல ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கத்தின் வெளியே ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பண்ருட்டி அருகே உள்ள மேல் இருப்பு கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் (43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது தந்தை ரங்கநாதன் பெயரில் எங்கள் ஊரில் பூர்வீக நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தை எங்கள் ஊரை சேர்ந்த சிலர் அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

இதை என் பெயருக்கு மாற்றி தர பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனால் மன உளைச்சலில் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயன்றதாக கூறினார். இதன் பின்னர் போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி, இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது. ஆட்சியரிடம் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன் பின்னர் இருவரும் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு